விருத்தாசலம் அருகே நீலகண்டேஸ்வரர் கோவில் முன் பக்தர்கள் திடீர் உண்ணாவிரதம்
விருத்தாசலம் அருகே பங்குனி உத்திர திருவிழா நடத்தக்கோரி நீலகண்டேஸ்வரர் கோவில் முன் பக்தர்கள் திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் புகழ்பெற்ற நீலமலர்கண்ணி உடனுறை நீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் கடந்த மாதம் 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கோவிலில் தினமும் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த மண்டல பூஜையின் போது, கோவிலில் திருவிழாக்கள் நடத்துவதில்லை. ஆனால் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடத்த அறங்காவலர் குழுவினரும், பக்தர்களும் முடிவு செய்தனர். அதன்படி மண்டல பூஜையை நாளை (இன்று) நிறைவு செய்வது எனவும், வருகிற 19-ந் தேதி அய்யனார் மற்றும் கிராமதேவதைகளுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், 20-ந் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், 21-ந் தேதி நீலகண்டேஸ்வரர் கோவிலுக்கு பங்குனி உத்திர திருவிழா காப்புக்கட்டுவது எனவும் முடிவு செய்தனர். இதனை பக்தர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் இது போன்று திருவிழா நடத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இது குறித்து பக்தர்களும், கோவில் நிர்வாகத்தினரும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் நேற்று திடீரென ஒன்று திரண்டு கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பங்குனி உத்திர திருவிழா நடத்தக்கோரி கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் மற்றும் வருவாய்துறையினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் திருவிழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story