இன்று நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 20,625 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்


இன்று நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 20,625 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 16 March 2018 4:00 AM IST (Updated: 16 March 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இன்று நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 20,625 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

பெரம்பலூர்,

தமிழகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார், ஆதிதிராவிடர் நலப்பள்ளி என 135 பள்ளிகளை சேர்ந்த 4,947 மாணவர்கள், 4,234 மாணவிகள் என மொத்தம் 9,181 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை எழுதுகின்றனர். மொத்தம் 37 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்வு மையங் களுக்கு எளிதில் மாணவர்கள் சென்று வரும் வகையில், பஸ் வசதி மற்றும் தேர்வு மையத்தில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, தடையின்றி மின்சார வசதி உள்ளிட்டவை மாவட்ட கலெக்டர் சாந்தா வழிகாட்டுதலின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு பணிகளுக்காக 37 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் 37 பேர், வழித்தட அலுவலர்கள் 11 பேர், அறை கண்காணிப்பாளராக 480 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வின் போது துண்டு சீட்டு வைத் திருத்தல், வினாத்தாள்- விடைத்தாளை பரிமாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம், காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களை கண்டுபிடிப்பதற்காக 52 பறக்கும் படையினர் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். தேர்வு மையத்திற்குள் வெளி நபர்கள் நுழைந்து விடாத வகையில், பலத்த போலீஸ் பாதுகாப்பும், வினாத்தாள்- விடைத்தாளை பத்திரமாக கொண்டு வருவதற்கும், பின்னர் தேர்வு முடிந்ததும் விடைத்தாளை பத்திரமாக எடுத்து செல்ல வழித்தட அலுவலர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் ஆகிய 165 பள்ளிகளை சேர்ந்த 5,312 மாணவர்கள், 5,788 மாணவிகள் என மொத்தம் 11,100 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை இன்று எழுதுகின்றனர். மொத்தம் 43 மையங்களில் தேர்வு நடக்கிறது. மேலும் தனித்தேர்வர்கள் 344 பேரையும் சேர்த்து மொத்தம் 11,444 மாணவ, மாணவிகள் தேர்வெழுத உள்ளனர். தேர்வு மையங்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பஸ் வசதி உள்ளிட்டவை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வழிகாட்டுதலின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருக்கின்றனர். தேர்வு நடைபெறும் 43 மையங் களுக்கும் முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் 117 நிலையான உறுப்பினர்களாக பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் கொண்டு செல்வதற்கும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து வருவதற்கும், அரியலூர் கல்வி மாவட்டத்திற்கு 4 வழித்தட அலுவலர்களும், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்கு 6 வழித்தட அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையத்தில் பணிபுரிவதற்கு போதுமான அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Next Story