கோவையில் பலத்த மழை; மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்தது


கோவையில் பலத்த மழை; மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்தது
x
தினத்தந்தி 16 March 2018 3:30 AM IST (Updated: 16 March 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பலத்த மழை பெய்தது. அப்போது மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்தது. இதனால் சரவணம்பட்டி பகுதியில் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

கோவை,

கோவையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று பகலில் வெயில் வழக்கம் போல அதிகமாக இருந்தது.

ஆனால் மாலை 5 மணியளவில் திடீரென்று பலத்த மழை கொட்டியது. கோவை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை 6 மணிக்கு பின்னர் மழை லேசாக தூறியது.

இதேபோல் கணபதி, சரவணம்பட்டி, கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அப்போது, சரவணம்பட்டி- சத்தி சாலையில் மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்தது. இதனால் மின் கம்பிகள் அறுந்ததால் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. அப்போது அந்த வழியில் வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதை அறிந்த மின் வாரிய ஊழியர்கள், மரங்களை வெட்டி அகற்றினர். இதையடுத்து மின்கம்பிகள் சரி செய்யப்பட்டன. கன மழை காரணமாக கணபதி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது போல் கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் லேசாக மழை பெய்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் ஒரு மி.மீட்டரும், அடிவாரத்தில் ஒரு மி.மீட்டரும் மழை பெய்தது.

Next Story