கண்ணன் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு


கண்ணன் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 16 March 2018 4:00 AM IST (Updated: 16 March 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

பெருகவாழ்ந்தான் அருகே கண்ணன் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெருகவாழ்ந்தான்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தானுக்கும், தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் பெரியகோட்டைக்கும் இடையே சொக்கனாவூர் அருகே கண்ணன் ஆறு செல்கிறது. அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்ணன் ஆற்றை கடந்து செல்ல வசதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு தரைபாலம் கட்டப்பட்டது.

இப்பாலத்தின் கைப்பிடி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. பாலத்தின் பல இடங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளன. ஆங்காங்கே விரிசலும் தென்படுகிறது. மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, தரைபாலம் மூழ்கி விடும். குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரு மாதம் வரை தரைபாலம் மூழ்கி இருக்கும். இதனால் கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வியாபாரிகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் மாற்று பாதையில் செல்ல வேண்டி உள்ளது.

தரை பாலம் ஆற்றுக்குள் மூழ்கி இருக்கும்போது, சொக்கனாவூர், புளியக்குடி, எளவனூர், பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, புத்தகரம், இடைச்சுமூலை, பாலையூர், மண்ணுக்குமுண்டான், தேவதானம், தெற்குநாணலூர், பெரியகோட்டை, மதுக்கூர், கூப்பாச்சிக்கோட்டை, சிரமேல்குடி, புலவஞ்சி, படப்பைக்காடு, சிராங்குடி, மண்ணங்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

தரைபாலத்தை இடித்துவிட்டு மேம்பாலம் கட்ட வேண்டும் என்றும் கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-

கண்ணன் ஆற்றின் குறுக்கே உள்ள தரைபாலம் பழுதடைந்து அபாய நிலையில் உள்ளது. மழை காலத்தில் இந்த பாலத்தால் எந்த பயனும் இல்லை. தரைபாலத்தை இடித்துவிட்டு ஆற்றின் குறுக்கே புதிதாக மேம்பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.

இதுதொடர்பாக எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. பாலத்தை அதிகாரிகள் ஆய்வு மட்டும் செய்கிறார்கள். புதிய மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதில்லை. அதேபோல கண்ணன் ஆற்றை தூர்வாரி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. கண்ணன் ஆற்றை தூர்வாரி, ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டினால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர். 

Next Story