காரில் வந்து பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த நெல்லை வாலிபர் கைது


காரில் வந்து பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த நெல்லை வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 March 2018 4:30 AM IST (Updated: 16 March 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் காரில் வந்து பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த நெல்லை வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்குகளில் இவர் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவகல்லூரி சாலை ஈஸ்வரி நகர் ஸ்டேட் வங்கி காலனி 2-ம் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி ஆனந்தி(வயது54). இவர் கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்த குப்பைகளை ஸ்ரீராம்நகரில் உள்ள தொட்டியில் கொட்டுவதற்காக சென்றார். குப்பைகளை தொட்டியில் கொட்டிவிட்டு வரும்போது அதே பகுதியை சேர்ந்த லட்சுமியும் குப்பைகளை கொட்டுவதற்காக வந்தார்.

லட்சுமியை பார்த்தவுடன் அவரை அழைத்து ஆனந்தி பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 பேர் காரில் வந்தனர். அவர்களில் ஒருவன் காரைவிட்டு கீழே இறங்கி வந்து ஆனந்தியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம்போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் காரில் ஏறி அந்த நபர், தனது நண்பருடன் தப்பி சென்றுவிட்டார். இது குறித்து தஞ்சை மருத்துவகல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காரில் வந்த திருடர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார், போலீஸ்காரர்கள் ராஜேஷ்கண்ணன், மோகன், மார்ட்டின், சிவபாதசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தஞ்சை மருத்துவகல்லூரி சாலை, ரெட்டிப்பாளையம் சாலை ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் பார்த்தனர்.

அதில் திருநெல்வேலி பதிவு எண் கொண்ட ஒரு காரில் வந்தவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த கார் எண்ணை கொண்டு கார் உரிமையாளரின் முகவரியை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் போலீசார் பெற்றனர். அந்த கார் 10 பேரிடம் கைமாறி இருந்தது. இறுதியாக நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த செல்லப்பா மகன் உமேஷ்(வயது27) வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் தனிப்படை போலீசார், நெல்லை மாவட்டம் மானூருக்கு விரைந்து சென்றனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கார், மானூரில் நின்றதை போலீசார் பார்த்தனர். இந்த காரில் வந்து தான் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த போலீசார், கார் நின்ற வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து உமேசை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தான் தனது நண்பர்களுடன் இணைந்து சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உமேசை காருடன் தஞ்சைக்கு அழைத்து வந்து மருத்துவகல்லூரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் உமேசிடம் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், இவர் மீது 2 கொலை வழக்குகள் இருப்பதும், சக நண்பர்களான திருநெல்வேலியை சேர்ந்த மாணிக்கராஜ், ராமையா, இசக்கிமுத்து ஆகியோருடன் சேர்ந்து சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உமேசை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 6 பவுன் சங்கிலியையும், காரையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் மீதும் வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் தஞ்சை, அதிராம்பட்டினம் உள்பட பல ஊர்களிலும் கைவரிசை காட்டியிருப்பதாக புகார் வந்துள்ளது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story