சாத்தான்குளம் அருகே பயங்கரம்: ஆடு மேய்க்க சென்ற முதியவர் வெட்டிக்கொலை மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


சாத்தான்குளம் அருகே பயங்கரம்: ஆடு மேய்க்க சென்ற முதியவர் வெட்டிக்கொலை மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 16 March 2018 2:00 AM IST (Updated: 16 March 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடத்தில் ஆடு மேயக்க சென்ற முதியவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தட்டார்மடம்,

தட்டார்மடத்தில் ஆடு மேயக்க சென்ற முதியவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

ஆடு மேய்க்க சென்ற முதியவர்


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 70). இவருடைய மனைவி ஈனமுத்து. இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

வேலாயுதம் தினமும் அங்குள்ள வைரவம் காட்டுப்பகுதியில் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வருவது வழக்கம். நேற்று காலையில் அவர் வழக்கம்போல் தனது ஆடுகளை அங்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

வெட்டிக்கொலை

மதியம் வைரவம் காட்டுப்பகுதியில் இருந்து சொக்கன்குடியிருப்புக்கு செல்லும் காட்டுப்பாதையில் வேலாயுதம் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்தன.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, தட்டார்மடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், சப்– இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

கொலை செய்யப்பட்ட வேலாயுதத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலாயுதத்தை கொலை செய்த மர்ம நபர் யார்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? சொத்து தகராறு அல்லது ஆடு மேய்க்கும் தகராறு காரணமாக வேலாயுதம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலாயுதத்தை வெட்டிக்கொன்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தட்டார்மடத்தில் ஆடு மேய்க்க சென்ற முதியவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story