விடுதலையான வழக்குகள் பற்றி பேச தடை கேட்டு எடியூரப்பா தொடர்ந்த வழக்கில் சித்தராமையாவுக்கு நோட்டீஸ்


விடுதலையான வழக்குகள் பற்றி பேச தடை கேட்டு எடியூரப்பா தொடர்ந்த வழக்கில் சித்தராமையாவுக்கு நோட்டீஸ்
x

விடுதலையான வழக்குகள் பற்றி பேச தடை கேட்டு எடியூரப்பா தொடர்ந்த வழக்கில் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பெங்களூரு,

விடுதலையான வழக்குகள் பற்றி பேச தடை கேட்டு எடியூரப்பா தொடர்ந்த வழக்கில் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

எடியூரப்பா சிறைக்கு சென்றார்


நில முறைகேடு வழக்குகளில் முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக பா.ஜனதா தலைவருமான எடியூரப்பா சிறைக்கு சென்றார். கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடக காங்கிரஸ் அரசு மீது எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் கர்நாடகத்தில் பிரசாரம் செய்யும்போது, சித்தராமையா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.

பதிலுக்கு சித்தராமையா, ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்த எடியூரப்பாவை அருகில் அமர வைத்துக்கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றி மோடியும், அமித்ஷாவும் பேசுவது சரியா? என்று கேள்வி எழுப்புகிறார். எடியூரப்பாவை சிறைக்கு சென்று வந்தவர் என்று காங்கிரஸ் கூட்டங்களில் சித்தராமையா அடிக்கடி சொல்கிறார். இது எடியூரப்பாவை வேதனை அடைய செய்துள்ளது.

சித்தராமையாவுக்கு நோட்டீஸ்


இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுவை எடியூரப்பா தாக்கல் செய்துள்ளார். அதில் நில முறைகேடு வழக்குகளில் தான் விடுதலையாகிவிட்டதாகவும், அவ்வாறு இருந்தும் முதல்-மந்திரி சித்தராமையா அதை குறிப்பிட்டு தன்னை தரக்குறைவாக பேசுகிறார், அவ்வாறு பேச தடை விதிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

இந்த மனு மீது நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல், உக்ரப்பா எம்.எல்.சி. உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story