ரங்கசமுத்திரா கிராமத்தில் சேற்றில் சிக்கிய காட்டுயானை ‘கும்கி’கள் உதவியுடன் மீட்பு


ரங்கசமுத்திரா கிராமத்தில் சேற்றில் சிக்கிய காட்டுயானை ‘கும்கி’கள் உதவியுடன் மீட்பு
x
தினத்தந்தி 16 March 2018 3:30 AM IST (Updated: 16 March 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

ரங்கசமுத்திரா கிராமத்தில், சேற்றில் சிக்கிய காட்டுயானையை கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்.

குடகு,

ரங்கசமுத்திரா கிராமத்தில், சேற்றில் சிக்கிய காட்டுயானையை கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்.

வாழை மரங்கள் சேதம்


குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குஷால் நகர் அருகே அமைந்துள்ளது ரங்கசமுத்திரா கிராமம். இந்த கிராமம் நாகரஒலே வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் நாகரஒலே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டுயானை இந்த கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர் அந்த யானை, கிராமத்தில் உள்ள ஒரு வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியது.

பின்னர் அது அங்கு அமைக்கப்பட்டிருந்த குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றது. அப்போது அந்த யானை சேற்றில் சிக்கிக் கொண்டது. இதைப்பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கும்கி யானைகள் வரவழைப்பு

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் காட்டுயானையை அங்கிருந்து விரட்ட முயன்றனர். ஆனால் அது சேற்றில் நன்றாக சிக்கிக் கொண்டதால் வெளியேற முடியாமல் தவித்தது. இதையடுத்து துபாரே யானைகள் முகாமில் இருந்து ரஞ்சன், தனஞ்செயா, இந்திரா ஆகிய 3 கும்கி யானைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

பின்னர் கும்கி யானைகள், சேற்றில் சிக்கிய காட்டுயானையை மீட்கும் பணியில் ஈடுபட்டன. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த காட்டுயானை சேற்றில் இருந்து மீண்டு வெளியே வந்தது. வெளியே வந்தவுடன் அது வனப்பகுதியை நோக்கி ஓடிவிட்டது.

நடவடிக்கை எடுக்கப்படும்

அதைப்பார்த்து வனத்துறையினரும், கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சேற்றில் சிக்கிய யானையை வெற்றிகரமாக மீட்டுள்ளோம். தற்போது கோடை காலம் வர இருப்பதால் யானைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்துவிடும். இதனால் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டும். வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

Next Story