“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற பெயரில் இனி இயங்குவோம்


“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற பெயரில் இனி இயங்குவோம்
x
தினத்தந்தி 16 March 2018 5:30 AM IST (Updated: 16 March 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

மேலூரில் நேற்று ஜெய லலிதா படத்துடன் புதிய கொடியை அறிமுகம் செய்து ஏற்றி வைத்த டி.டி.வி. தினகரன், “துரோகிகளிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கும் வரை “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற பெயரில் இயங்குவோம்” என்று அறிவித்தார்.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூரில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. புதிதாக தொடங்கும் இயக்கத்தின் பெயர், கொடியை அறிமுகம் செய்யும் விழா நேற்று காலை நடந்தது. இதற்காக மேலூர்-அழகர்கோவில் சாலையில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை தனியார் ஓட்டலில் தங்கியிருந்த டி.டி.வி.தினகரன் வேன் மூலம் மேலூருக்கு திறந்த வேனில் வந்தார். மேலூரை வந்தடைந்ததும் தொண்டர்கள் அவரை வாண வேடிக்கையுடன் வரவேற்றனர்.

பின்னர் அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். விழாவுக்கு அவைத்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.யும், அமைப்பு செயலாளருமான ஆர்.சாமி, புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன், மாநகர மாவட்ட செயலாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், புகழேந்தி, முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், ராஜ்யசபை எம்.பி. சசிகலா புஷ்பா, நடிகர்கள் செந்தில், குண்டுகல்யாணம், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் டி.டி.வி.தினகரனுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், வெள்ளி வேலை பரிசாக வழங்கினார்.

அதைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன் புதிய இயக்கத்தின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். பின்பு மேடையின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த 108 அடி உயரக்கொடிக் கம்பத்தில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் ஜெயலலிதா படத்துடன் கூடிய கட்சிக் கொடியை ஏற்றினார்.

நமது தியாகத் தலைவி கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மாவின் தலைமையில் இயங்கி கொண்டிருக்கின்ற நமது இயக்கத்தின் தொண்டர்களாகிய உங்களுக்கு எல்லாம் தெரியும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி துரோகிகள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் கொடுத்த மனுவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரையும், நமது வெற்றிச் சின்னமாகிய இரட்டை இலையையும் முடக்கியது.

அதன் பின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நீங்கள் கட்சியின் பெயரை தெரிவியுங்கள். அதில் நீங்கள் செயல்பட அனுமதிக்கிறோம் என்றார்கள். அன்றைக்கு அ.இ.அ.தி.மு.க. அம்மா என்ற பெயரிலேயே இயக்கம் தொடங்கிய நான், அந்த தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட நான், அந்த தேர்தல் நடந்த பிறகும் அதே பெயரில் இயங்கலாம் என்று நமக்கு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததால் நமது பொதுச்செயலாளர் சின்னம்மா தலைமையில் நாம் எல்லோரும் இயங்கி வந்தோம்.

ஆனால் கடந்த நவம்பர் மாதம் தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கிய போது மதுசூதனன் அன்கோவிற்கு இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அ.இ.அ.தி.மு.க. என்ற பெயரை நாம் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது உங்கள் அனனவருக்கும் நன்றாகத் தெரியும்.

கடந்த 4 மாதங்களாக ஏன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது கூட உங்களின் ஒருவனாகிய நான், உங்கள் வீட்டுப் பிள்ளையாகிய நான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகின்ற நிலை ஏற்பட்டது. மேலும் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் அந்த தேர்தலில் போட்டியிட்டு உதயசூரியன் சின்னத்தை டெபாசிட் இழக்கச் செய்தோம். இரட்டை இலை தப்பித்தவறி பிழைத்துக் கொண்டது. அந்த தேர்தலில் கிட்டத்தட்ட பதிவான வாக்குகளிலே 50 சதவீதத்திற்கு மேல் நமக்கு மக்கள் வாக்களித்து 7½ கோடி தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தை பிரதிபலித்து அன்றைக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், அம்மா தொகுதி மக்கள் வெற்றியை தேடித் தந்தார்கள். கடந்த 4 மாதங்களாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நம்மால் பெயர், கொடி இல்லாமல் அனுமதி வாங்க முடியாமல், நாம் எவ்வாறு சிரமப்பட்டோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்த 1½ கோடி தொண்டர்களும் பெயரில்லாமல் எத்தனை காலம் செயல்பட முடியும் என்ற காரணத்தினால் தான் நீதிமன்றத்தில் பொதுச்செயலாளரும், நானும் கொடுத்திருக்கிற மேல் முறையீட்டில் எங்களது உரிமையை விட்டுக் கொடுக்காத வகையில் மீண்டும் நாங்கள் இயங்குவதற்கு எங்களுக்கு பெயரை வழங்க வேண்டும் என்று வழக்கு செய்திருந்தோம்.

அந்த தீர்ப்பு கடந்த 9-ந் தேதி வந்தது. தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தினகரன் கேட்கின்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். வருங்காலத்தில் உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி நாம் இரட்டை இலையை மீட்டெடுக்கும் வரை நமக்கு குக்கர் சின்னத்தை பெற்றிருக்கிறோம்.

அது போல கட்சிக்கு பெயரில்லாமல் செயல்பட்ட நாம் இன்று முதல் பெயரோடு செயல்பட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கிற மாபெரும் இயக்கத்தை துரோகிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கு நமது இயக்கத்தின் பெயரை இப்போது உங்களின் சார்பாக அறிவிக்க இருக்கின்றேன்.

இந்த நேரத்தில் நமது கழக பொதுச்செயலாளர் சின்னம்மா நம்மோடு இல்லை என்றாலும் அவரது வாழ்த்துக்களுடன் அவரது அனுமதியுடன் அந்த பெயரை அறிவிக்கிறேன்.

புரட்சித் தலைவி அம்மாவின் தொண்டர்களான இந்த இயக்கத்திற்கு “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்று பெயரிட்டு இருக்கிறோம். அம்மாவின் பெயரிலேயே இந்த இயக்கம் இயங்க வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். அதன் கொடியை இப்போது அறிமுகம் செய்கிறேன்.

இன்று முதல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரிலேயே எம்.ஜி.ஆரின் வாரிசாகிய, அம்மாவின் தொண்டர்களாகிய நாம் செயல்பட இருக்கிறோம். எந்த தேர்தல் வந்தாலும் அதில் வெற்றி பெறுவோம்.

இன்றைக்கு துரோகிகளிடம் சிக்கி இருக்கிற வெற்றிச் சின்னம் இரட்டை இலையை மீட்டெடுக்கும் வரை நாம் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு, எந்த தேர்தலிலும் வெற்றி பெற்று இரட்டை இலையை மீட்டெடுப்போம் என்ற உறுதியை இந்த நேரத்தில் நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அது போல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்கு இன்று முதல் செயல்பட்டு நிச்சயம் வருங்காலத்தில் அ.தி.மு.க. என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம்.

அம்மாவின் தொண்டர்களாகிய 1½ கோடி பேருக்கும் 4 மாதங்களாக பெயரில்லாமல் செயல்பட்ட நாம் மீண்டும் இன்றைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த உருவமாக திகழ்கின்ற திராவிட மக்களின் பாதுகாவலர் அம்மாவின் பெயரில் இந்த இயக்கம் இனி சீரோடும், சிறப்போடும் தொடர்ந்து செயல்பட்டு வருங்காலத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலாக இருந்தாலும் சரி, உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி இந்த பெயரிலேயே நாம் செயல்படுவோம்.

இந்த நேரத்தில் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். இந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரை நமது தலைமை கழக நிர்வாகிகள் பல பேர் கூடி தேர்ந்தெடுத்தார்கள். அது போல கட்சியின் கொடியை அம்மாவின்(ஜெயலலிதாவின்) படத்தை வைத்து வடிவமைத்தவர், தஞ்சாவூரை சேர்ந்த 39-வது வட்டச் செயலாளர் கே.வெங்கட்ரமணி என்பதை மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இயக்கம் ஏழை-எளிய சாமானிய மக்கள் வாழ்வின் வளர்ச்சிக்காகவும், விவசாய பெருமக்களின் உரிமையை மீட்டெடுப்பதற்காகவும், காவிரியில் முறையான தண்ணீரை பெற்றுத் தருவதற்காகவும், தமிழகத்தை பாதிக்கின்ற தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்காத அளவுக்கு செயல்படும்.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் இயக்கமாக இந்த இயக்கம் ஆட்சியை பிடித்து செயல்படும். தமிழகம் பொருளாதாரம் தொழில்துறையில் முன்னேறி இந்தியாவிலேயே ஒரு சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என்கிற அம்மாவின் கனவை நிச்சயம் அம்மாவின் பெயரில் இயங்குகின்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிச்சயம் செய்து முடிக்கும். உங்கள் ஆதரவோடு, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு, இளைஞர் பட்டாளத்தின் ஆதரவோடு நாம் எப்போது தேர்தல் வந்தாலும் வெற்றி பெற்று அதை நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் கூறுகிறேன்.

மேலும் விரைவில் தொடங்க உள்ள உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலர்களிடம் கொடுக்க இருக்கிறேன். தாய்மார்களும், பெரியோர்களும் இளைஞர்களும் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே நீங்கள் தேனீக்கள், எறும்புகள் போன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு அவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் தெய்வேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பையா, மேலூரை சேர்ந்த சரவணன், செல்வராஜ், சோமாசி, எஸ்.சரவணன், உமாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்பு தினகரன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

அ.தி.மு.க.வின் 95 சதவிகித உறுப்பினர்களும் எங்களின் பக்கம் தான் உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி மேலூரில் இதே திடலில் வெற்றிகரமாக நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு அடுத்தபடியாக இன்று எங்களது புதிய அமைப்பின் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. அ.தி.மு.க.வையும், அதன் சின்னத்தையும் மீட்டெடுக்கும் வரை ஓர் அமைப்பாக நாங்கள் இயங்குவோம். இன்று நடைபெற்ற அறிமுகவிழா எங்களின் எதிர்பார்ப்பையும விஞ்சும் வகையில் பெருங்கூட்டத்துடன் நடைபெற்றுள்ளது. சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இதில் பங்கேற்றனர்.

மருத்துவக் கல்விக்கான நீட் தேர்விற்கு மாணவர்கள் ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தற்போது சித்த மருத்துவத்திற்கும் நீட் தேர்வு என்பது தமிழக மாணவர்களை மத்திய அரசு வஞ்சிக்கும் செயலாகும். மத்திய பாஜக அரசை மாணவர்கள் எதிர்க்கின்றனர். ஆனால் தமிழக அரசு மவுனம் காக்கிறது. இவ்வாறு தினகரன் கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொடக்க விழாவில்3 எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு சசிகலா புஷ்பாவும் கலந்து கொண்டார் மேலூரில் தினகரன் நேற்று நடத்திய கூட்டத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

அத்துடன், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துவரும் எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டனர். விழா மேடையில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.

மேலும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சசிகலாபுஷ்பாவும் வந்திருந்து தினகரனை சந்தித்துப் பேசினார். இது குறித்து தங்கதமிழ்ச்செல்வன் பேசும் போது, எங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

Next Story