பொதுசேவை மையங்கள் மூலம் கூடுதலாக 15 வகையான சான்றிதழ்கள் கலெக்டர் தகவல்
பொதுசேவை மையங்கள் மூலம் கூடுதலாக 15 வகையான சான்றிதழ்கள் வழங் கப்படுவதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறினார்.
தேனி,
தேனி மாவட்டத்தில் 72 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், 81 கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள், 8 அரசு கேபிள் டிவி மையங்கள் மற்றும் 45 கிராமப்புற தொழில் முனைவோர் மையங்கள் என மொத்தம் 206 இடங்களில் அரசு பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இம்மையங்களில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் போன்ற 5 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் உத்தரவின்படி, தற்போது மின் ஆளுமை திட்டத்தின் கீழ் விவசாய வருமானச்சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்பு திருமணச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வேலையின்மைச் சான்றிதழ், குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ், ஆண் குழந்தையின்மை சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், செல்வநிலைச் சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் என மொத்தம் 15 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள பொதுசேவை மையங்களுக்கு சென்று தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை விண்ணப்பிக்கும் போது, விண்ணப்ப எண்ணுடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இந்த விவரம் தங்களது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மேலும், விண்ணப்பங்களின் நிலை குறித்து அறிய பொதுமக்கள் 155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியோ அல்லது https://ed-ist-r-icts.tn.gov.in/rev-e-nue/status.html என்ற இணையதள முகவரி வாயிலாகவோ தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும், விண்ணப்பதாரருக்கு இணையதள முகவரியுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக் குறுஞ்செய்தி பெறப்பட்டவுடன், விண்ணப்பதாரர்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலமாக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அருகாமையிலுள்ள அரசு பொது சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story