வழிதவறி வருபவர்களை அடையாளம் கண்டு போலீசில் ஒப்படைக்க பயிற்சி


வழிதவறி வருபவர்களை அடையாளம் கண்டு போலீசில் ஒப்படைக்க பயிற்சி
x
தினத்தந்தி 16 March 2018 3:51 AM IST (Updated: 16 March 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

வழி தவறி வரும் குழந்தைகள், பெரியவர்களை அடையாளம் கண்டு அவர்களை போலீசில் ஒப்படைக்க ரெயில்வே பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ரெயில்வே போலீஸ் அதிகாரி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

ராமேசுவரம்,

தமிழக ரெயில்வே கூடுதல் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு நேற்று ராமேசுவரம் வந்தார். பின்பு அவர் பாம்பன் ரெயில்வே பாலம், ராமேசுவரம் ரெயில் நிலையம், ரெயில்வே போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த ஆண்டு ரெயில் மூலம் வழிதவறி வந்த குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்து 175 பேர் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று தவறி வரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உள்ளூர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு ரெயில்வே பணியாளர்கள், ஆட்டோ தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி, சென்னை எழும்பூர் போன்ற இடங்களில் இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல ராமேசுவரத்திலும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக வடமாநிலங்களை சேர்ந்த குழந்தைகள், பெரியவர்கள் வழி தவறி இங்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவ்வாறு வருபவர்களை அவர்களது மொழி தெரிந்தவர்கள் மூலம் விசாரித்து பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ரெயில்வே போலீசார் மூலம் 823 வெளிமாநில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ரெயில் நிலையங்களில் தற்போது குற்றங்கள் நடைபெறுவது மிகவும் குறைவாக உள்ளது. பாம்பன் பாலத்தில் தவறி விழுந்தோ, தற்கொலை செய்து கொள்வதோ தடுக்கப்படும். பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். தமிழகத்தில் உள்ள பெரிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் முகநூலில் பதிவு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வந்து செல்லும் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story