சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்


சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 16 March 2018 4:54 AM IST (Updated: 16 March 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சபாநாயகர் வைத்திலிங்கத்திடம், சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சபா நாயகர் வைத்திலிங்கத்தை சட்டசபையில் அவரது அலுவலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் குறிப்பிட்ட காலத்திற்குள் அமைக்க மத்திய அரசுக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி விவாதித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ரோடியர் மில், சுதேசி, பஞ்சாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலை போன்றவை மூடப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடுவீதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடப்பட்டதால் கரும்பு விவசாயிகள் தங்கள் கரும்புக்கு பணம் கிடைக்காமலும், எதிர்காலத்தில் கரும்பு பயிரிட வழியின்றியும் தவிக்கின்றனர். இந்த இந்த ஆலையின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு சட்டசபையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும்.

காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட சில திட்டங்களை புதிய அரசு அமைந்த உடன் நிறைவேற்றுவதாக மேற்கொண்ட நடவடிக்கை தடைப்பட்டுள்ளது. எனவே இலவச அரிசி வழங்குதல், 100 யூனிட் வரை இலவச மின்சாரம், முதியோர், விதவைகள் ஓய்வூதியம் உயர்வு, விவசாயிகளுக்கான கூட்டுறவு வேளாண் கடன் தள்ளுபடி, ஆதிதிராவிட மாணவர்களுக்கு உயர்கல்வி முழு கட்டண சலுகை உள்ளிட்டவைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வால் புதுவை மாணவர்கள் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகின்றனர். நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் ஒரு இடம் கூட புதுவை மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது. இந்த நிலையில் புதிதாக 2 தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக தகுதி வழங்குவதற்கான தடையில்லா சான்றிதழ்களை அரசு அளித்துள்ளது என்பது கண்டனத்திற்குரியது. முதுநிலை மருத்துவக்கல்லூரி இடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படுகின்ற நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் புதுவை மாணவர்கள் யார்?, யார்? என்ற விவரங்களும், அவர்களின் தகுதிப்பட்டில் மற்றும் இடஒதுக்கீடு பட்டியல் போன்றவை புதுவை அரசால் இன்னும் வெளியிடப்படவில்லை. இது பற்றியும் சட்டசபையில் விவாதிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு மானியம் வழங்குதல், சரக்கு மற்றும் சேவை வரி பாதிப்பு, மின்கட்டண குளறுபடிகள், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக்கான புதிய வரிகள், வீட்டுவரி உயர்வு உள்ளிட்டவைகள் குறித்தும் சட்டசபையில் விவாதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story