வியாபாரிகள் காய்கறி விற்க எதிர்ப்பு: உழவர் சந்தையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


வியாபாரிகள் காய்கறி விற்க எதிர்ப்பு: உழவர் சந்தையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2018 3:45 AM IST (Updated: 17 March 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் காய்கறி விற்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோவை,

கோவை சிங்காநல்லூரில் உழவர் சந்தை உள்ளது. இங்கு ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வரு கின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் காய்கறி கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சண்முகம், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணி உள்பட ஏராளமான விவசாயிகள் உழவர்சந்தை வளாகத்தில் உள்ள அலுவலகம் முன் நேற்று காலை திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த உழவர் சந்தை நிர்வாக அதிகாரி திருப்பதி உள்ளிட்ட அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், குளிர்பதன கிடங்குக்கான வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.

முன்னதாக விவசாயிகள் கூறியதாவது:-

சிங்காநல்லூர் உழவர்சந்தையை நம்பி கோவை மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் உள்ளனர். ஆனால் உழவர் சந்தைக்குள் விவசாயிகள் என்ற போர்வையில் வியாபாரிகள் சிலர் காய்கறிகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே விவசாயிகள் என்ற போர்வையில் காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிந்து அவர்களை உழவர் சந்தையை விட்டு வெளியேற்ற வேண்டும். மேலும் இங்குள்ள குளிர்பதன கிடங்கு பராமரிப்பு பணியை தனியாருக்கு விட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் குளிர் பதன கிடங்கில் காய்கறிகளை சேமித்து வைக்க கூடுதல் வாடகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் விவசாயிகள் குளிர்பதன கிடங்கை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதை பயன்படுத்தி வெளியே உள்ள வியாபாரிகள் தங்களது காய்கறிகளை இங்கே சேமித்து வருகின்றனர். இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story