என்ஜினில் திடீர் கோளாறு ஊட்டி மலைரெயில் நடுவழியில் நிறுத்தம்: சுற்றுலா பயணிகள் அவதி


என்ஜினில் திடீர் கோளாறு ஊட்டி மலைரெயில் நடுவழியில் நிறுத்தம்: சுற்றுலா பயணிகள் அவதி
x
தினத்தந்தி 17 March 2018 3:15 AM IST (Updated: 17 March 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக ஊட்டி மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து, மலைப்பகுதியின் இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. அதில் 200 சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர்.

கல்லாறு- அடர்லி ரெயில் நிலையங்கள் இடையே காலை 7.50 மணிக்கு மலைரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் ரெயில் நிறுத்தப்பட்டதால், அங்கு ஒருவித பரபரப்பு நிலவியது. இது குறித்த தகவலின்பேரில் ரெயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து மலைரெயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர். அதன்பின்னர் 3½ மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு மலைரெயில் அங்கிருந்து குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். 

Next Story