ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய ஜவுளி துறை ஆணையாளர் பேட்டி


ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய ஜவுளி துறை ஆணையாளர் பேட்டி
x
தினத்தந்தி 17 March 2018 4:00 AM IST (Updated: 17 March 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ஜவுளித்துறை ஆணையாளர் கவிதா குப்தா தெரிவித்து உள்ளார்.

கோவை,

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பஞ்சாலைகள் சங்க அலுவலகத்தில் செயற்கை நூலிழை ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் மண்டல அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சைமா தலைவர் பி.நடராஜ் தலைமை தாங்கினார். மத்திய ஜவுளித்துறை ஆணையாளர் கவிதா மண்டல அலுவலகத்தை திறந்து வைத்து உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை வழங்கினார்.

இதில் செயற்கை நூலிழை ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் துணைத்தலைவர் ரோனக் ருகானி, இயக்குனர் பிரகாஷ் வாசுதேவன், ஜெய்கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மத்திய ஜவுளித்துறை ஆணையாளர் கவிதா குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக அளவில் 70 சதவீதம் செயற்கை நூலிழையும், 30 சதவீதம் பருத்தி நூலிழையும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அது தலைகீழாக உள்ளது. இங்கு 70 சதவீதம் பருத்தி நூலிழையும், 30 சதவீதம் செயற்கை நூலிழையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே செயற்கை நூலிழை பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் மொத்த ஜவுளி வர்த்தகம் 122 பில்லியன் டாலராக உள்ளது. இதனை வருகிற 2025-ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஜவுளி துறையில் வெளிநாட்டு முதலீடு ரூ.30 ஆயிரம் கோடி என்ற அளவில் உள்ளது.

ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு ஆர்.ஓ.எஸ்.எல். திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு தற்போது ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. செயற்கை நூலிழை ஏற்றுமதியில் இந்தியா முதல் 10 இடங் களில் இடம் பிடித்து உள் ளது. இதுதவிர மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருவாகி வரும் புதிய சந்தை வாய்ப்புகளை கையகப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு ஜவுளித்துறைக்கு புதிய சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன. ஜவுளி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாக நிறுவனங்கள் ரூ.1 கோடி செலுத்தினால், அதற்கு மானியமாக ரூ.55 லட்சம் வரை மத்திய அரசு வழங்குகிறது.

சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒருங்கிணைந்த ஜவுளி கண்காட்சி நடத்தப்பட்டது. இதேபோன்று கோவையில் ஒருங்கிணைந்த ஜவுளி கண்காட்சி நடத்த நிறுவனங்கள், அமைப்புகள் இணைந்து வந்தால் அதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story