நீலகிரியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இயற்கை உரங்கள் வழங்கும் திட்டம்: கலெக்டர் தகவல்


நீலகிரியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இயற்கை உரங்கள் வழங்கும் திட்டம்: கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 March 2018 4:00 AM IST (Updated: 17 March 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்ரமணியம் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் விவசாயிகளின் 33 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது. தோட்டக்கலை துறையின் மூலம் சொட்டுநீர் பாசனத்திட்டம் தொடர்பான செயல்விளக்க காட்சி விவசாயிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:-

2016-2017-ம் ஆண்டு ரபி பருவ பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் மகசூல் இழப்பீடு நிவாரணத்தொகை ஒரு வார காலத்திற்குள் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தோட்டக்கலைத்துறையின் மூலம் பாரம்பரிய வேளாண் சாகுபடி திட்டத்தின் படி, இயற்கை உரங்கள் மானிய விலையில் ஊட்டி தாலுகாவில் எடக்காடு கிராமத்திலும், கோத்தகிரி தாலுகாவில் கக்குளா கிராமத்திலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஊட்டி தாலுகாவில் ஓடக்காடு, புதுமந்து, குன்னூர் தாலுகாவில் அதிகரட்டி, கோத்தகிரி தாலுகாவில் கூக்கல்தொரை, கெங்கரை, கூடலூர் தாலுகாவில் சேலக்குன்னு ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டம் மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் இயற்கை உரங்கள் மானியத்தில் வழங்க கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் குறிப்பிட்ட கிராமத்தை தேர்வு செய்து தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகினால், அங்கு இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

Next Story