எட்டயபுரம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் தாசில்தாருக்கு கொலைமிரட்டல்


எட்டயபுரம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் தாசில்தாருக்கு கொலைமிரட்டல்
x
தினத்தந்தி 17 March 2018 2:00 AM IST (Updated: 17 March 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் தாசில்தாருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக, கணவர் மற்றும் மகனுடன் முன்னாள் பஞ்சாயத்து தலைவி கைது செய்யப்பட்டார்.

எட்டயபுரம்,

எட்டயபுரம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் தாசில்தாருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக, கணவர் மற்றும் மகனுடன் முன்னாள் பஞ்சாயத்து தலைவி கைது செய்யப்பட்டார்.

மணல் கடத்தல்


எட்டயபுரம் தாசில்தார் சூர்யகலா தலைமையில், துணை தாசில்தார் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் உள்ளிட்ட குழுவினர் நேற்று அதிகாலையில் எட்டயபுரம் அருகே கீழ்நாட்டுகுறிச்சியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள வைப்பாற்று படுகையில் சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் மினிலாரியில் ஆற்று மணலை அள்ளிக் கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் மினிலாரியை டிரைவர் வேகமாக ஓட்டி தப்பி சென்றார். தொடர்ந்து அங்கிருந்த பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதற்கு பொக்லைன் ஆபரேட்டரான கீழ்நாட்டுகுறிச்சியைச் சேர்ந்த முத்து கருப்பன் (வயது 24) எதிர்ப்பு தெரிவித்து, அரிவாளை காட்டி, அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்தார். இதற்கிடையே அங்கு வந்த முத்து கருப்பனின் தந்தை தங்க மாரியப்பன் (55), தாயார் மாரியம்மாள் (45) ஆகியோரும் அதிகாரிகளிடம் தகராறு செய்து, கொலைமிரட்டல் விடுத்தனர்.

3 பேர் கைது


இதுகுறித்து தாசில்தார் சூர்யகலா, மாசார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார், மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்த தங்க மாரியப்பன், மாரியம்மாள், முத்து கருப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைதான மாரியம்மாள் முன்னாள் பஞ்சாயத்து தலைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story