பழனி அருகே, காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


பழனி அருகே, காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 March 2018 3:15 AM IST (Updated: 17 March 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கீரனூர்,

பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி ஒன்றியம் கோட்டத்துறை ஊராட்சிக்கு உட்பட்டது கல்துரை கிராமம். இங்கு வாரத்துக்கு ஒரு முறை குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கிராம மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அவ்வப்போது வினியோகிக்கப்படும் குடிநீரும் சுத்தமின்றி இருந்துள்ளது. இது குறித்து கோட்டத்துறை ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் பழைய தாராபுரம்-அலங்கியம் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவலறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஓரிரு நாட்களுக்குள் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக பழைய தாராபுரம்-அலங்கியம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story