கரையாம்புத்தூரில் அம்பேத்கர் சிலை பீடம் அகற்றப்பட்டதை கண்டித்து மறியல், போலீசாருடன் மோதல்; பதற்றம்


கரையாம்புத்தூரில் அம்பேத்கர் சிலை பீடம் அகற்றப்பட்டதை கண்டித்து மறியல், போலீசாருடன் மோதல்; பதற்றம்
x
தினத்தந்தி 17 March 2018 3:45 AM IST (Updated: 17 March 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

கரையாம்புத்தூரில் அம்பேத்கர் சிலை நிறுவுவதற்காக அமைக்கப்பட்ட பீடத்தை போலீசார் அகற்றியதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

கரையாம்புத்தூர்,

பாகூரை அடுத்த கரையாம்புத்தூரில் அரசு தொடக்கப்பள்ளிக்கு எதிரே கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மார்பளவு அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. தற்போது அந்த இடத்தில் புதிதாக அம்பேத்கர் சிலை அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு பீடம் அமைக்கப்பட்டது.

அதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது இடத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதிக்கக் கூடாது என மாவட்ட துணை கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கு புகார் மனு அனுப்பினர்.

அதைத் தொடர்ந்து அனுமதி இன்றி அமைக்கப்பட்ட அந்த பீடத்தை அகற்ற துணை கலெக்டர் உதயகுமார் உத்தரவிட்டார். அதன்படி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தரராஜன், தாசில்தார் கார்த்திகேயன், தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை அந்த பீடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு பீடத்தை அகற்றும் பணியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கு திரண்டு வந்தனர்.

அம்பேத்கர் சிலை நிறுவுவதற்காக அமைக்கப்பட்ட பீடத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

இருந்தபோதிலும் எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட பீடம் அகற்றப்பட்டது. அப்போது அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்தை ஊழியர்கள் அகற்றி வண்டியில் வீசியதாக கூறப்படுகிறது.

அதைப் பார்த்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், பெண்களும் ஆவேசம் அடைந்தனர். அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்துவிட்டதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை அகற்றாமல் ஒருதலைப்பட்சமாக அம்பேத்கர் சிலை பீடத்தை அகற்றியதாக கூறியும் அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் உண்ணாவிரதமும் இருந்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. அங்கிருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன, பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். போலீஸ் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அம்பேத்கர் சிலை அமைக்கும் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டு வந்து பதற்றத்தை தணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தாசில்தார் கார்த்திகேயன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தரராஜன் ஆகியோர் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் புதிதாக அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கு பதில் ஏற்கனவே மார்பளவு அம்பேத்கரின் பழைய சிலையை அகற்றி அதே இடத்தில் புதிதாக பீடம் அமைத்து அம்பேத்கர் முழு உருவ சிலை அமைக்கலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

அதனை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து கரையாம்புத்தூரில் நேற்றுக் காலை முதல் நிலவி வந்த பதற்றமும், பர பரப்பும் முடிவுக்கு வந்து சகஜ நிலை திரும்பியது. அமைதி திரும்பியதை தொடர்ந்து மாலை 6-30 மணிக்கு கரையாம்புத்தூரில் மீண்டும் பஸ் போக்குவரத்தும் தொடங்கியது.

Next Story