புதுச்சேரி கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு


புதுச்சேரி கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 17 March 2018 4:00 AM IST (Updated: 17 March 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் நடந்த புதுச்சேரி கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட நிர்வாகம், புதுச்சேரி மாநில அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு குழுமம் ஆகியவை சார்பில் காரைக்கால் மாவட்டத்திற்கான திருத்தப்பட்ட புதுச்சேரி கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் காரைக்காலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கேசவன் தலைமை தாங்கினார். அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அறிவியல் அதிகாரி சகாய ஆல்பிரட், சுற்றுச்சூழல் பொறியாளர் என்.ரமேஷ், விஞ்ஞானி விபின் பாபு, காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களின் பஞ்சாயத்து நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் மீனவ சங்க நிர்வாகிகள் பேசுகையில், கூட்டம் நடத்தப்படுவது குறித்து மீனவ கிராம பஞ்சாயத்தார்களுக்கு யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. கூட்டத்தில் மீனவர்களின் கருத்துகள் முக்கியமானது. மீனவர்களை புறக்கணித்துவிட்டு கூட்டம் நடத்த முயன்றது தவறான செயல். எனவே கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

மீனவர்களுக்கு உரிய தகவல் தெரிவித்து, ஏதேனும் ஒரு மீனவ கிராமத்தில் இந்த கூட்டத்தினை நடத்த வேண்டும் என்று கூறி கூட்டத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் கூச்சல்-குழப்பம் நிலவியது. பின்னர் அமைதி ஏற்பட்ட சூழ்நிலையில் கூட்டம் தொடங்கியது.

தொடர்ந்து இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் அனந்தகுமார் பேசியதாவது:-

மீனவர்களின் வாழ்வாதாரம் முக்கியம். கடற்கரை மற்றும் கடல் பகுதியின் குறிப்பிட்ட பகுதியை மத்திய அரசு கையகப்படுத்தி, தனியாருக்கு தாரைவார்க்க உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு தாரைவார்க்கப்பட்டால், மீனவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் கடற்கரை பக்கம் செல்ல முடியாத அவல நிலை ஏற்படும். ஏற்கனவே இந்தியாவில் பல இடங்களில் இது போன்ற நிலை உள்ளது. இதுபோன்ற கருத்துகளை மீனவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்து கூட்டம் நடத்த முயன்றது கண்டனத்துக்கு உரியது.

திருத்தப்பட்ட புதுச்சேரி கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் என மாவட்ட நிர்வாகம் கூறுவதால், இத்திட்டத்தில் என்ன உள்ளது? நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்பது கூட்டம் நடந்தால்தான் தெரிந்து கொள்ள முடியும். இல்லையென்றால், கூட்டம் நடத்தியதாக கூறி, திட்டத்தை நமது ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றும் நிலை ஏற்படும். எனவே கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட கலெக்டர் கேசவன் பேசுகையில், இந்த திட்டத்திற்கான வரைபடம் 1991-ல் தயாரிக்கப்பட்டு, 1993-ம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. சுனாமிக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் புதிய வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வரைபடத்தின் மூலம் நண்டு, ஆமை, பறவைகள் வாழ்விடம் சம்பந்தமாக மீனவர்களிடமும், பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இவர்கள் கூறும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அளிக்கப்படும். அதன் பிறகு நடைமுறைபடுத்துவது சம்பந்தமாக முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

மேலும் வருகிற 20-ந் தேதிக்குள் இது சம்பந்தமான கருத்துக்களை அரசு கலை கல்லூரி எதிரில் உள்ள அறிவியல் தொழில் நுட்பத்துறையிலும் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் அளிக்கலாம். இந்த கருத்துகள் அனைத்தும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அதனை மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் முதுநிலை அறிவியல் அதிகாரி சகாய ஆல்பர்ட் கூறினார். 

Next Story