சட்டமன்ற கூட்டத்தை 20 நாட்கள் நடத்த வேண்டும்: அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


சட்டமன்ற கூட்டத்தை 20 நாட்கள் நடத்த வேண்டும்: அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 March 2018 4:45 AM IST (Updated: 17 March 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டமன்ற கூட்டத்தை 20 நாட்கள் நடத்த வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி,

புதுவை சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

வருகிற 26-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் மாநில வளர்ச்சி, நிதி நெருக்கடி, மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தி முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் இந்த சட்டமன்ற கூட்டத்தை குறைந்தது 20 நாட்களாவது நடத்த தாங்கள் வழிவகை செய்திட வேண்டும்.

மாநில திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காதது, நிதி நெருக்கடி, வருவாய் சம்பந்தமான ஆலோசனைகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட மாநில உரிமைகள் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கவும், சட்ட ஒழுங்கு சீர்குலைவு, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாதது, மக்களின் சுகாதாரம், வேலைவாய்ப்புகள், பஞ்சாலை தொழிலாளர் பிரச்சினை, கூட்டுறவு கரும்பு ஆலை பிரச்சினை, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்தாதது, அரசு சார்பு நிறுவனம் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது, ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காதது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தாதது, மேம்பால பணிகள் நிறைவு பெறாதது, சென்டாக் மாணவர்கள் சேர்க்கையை வரைமுறைப்படுத்தாதது உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து சட்டசபையில் விவாதம் நடத்தி தீர்வுகாண வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

எனவே இதற்கு சட்டசபை குறைந்தது 20 தினங்களாவது நடத்தப்பட வேண்டும். அதற்கான முடிவு எடுக்க அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை கூட்ட தாங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.

இந்த ஆண்டுக்கான திட்டங்களுக்கும், அரசின் செலவினங்களுக்கும் முறையாக ஆய்வு செய்து சட்டமன்ற அனுமதி வழங்கவும், துறைவாரியான விவாதத்துக்கு கால ஒதுக்கீடு செய்யவும் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவின் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story