புதுப்பேட்டையில் பயங்கரம் மூதாட்டியை கொன்று ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை
புதுப்பேட்டையில் மூதாட்டியை கொன்று ரூ.2½ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுப்பேட்டை,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் கல்லாங்குட்டை தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு(வயது 82). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. கணவன், மனைவி மட்டும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக முனுசாமி இறந்து விட்டார்.
இதனை தொடர்ந்து சின்னப்பொண்ணு மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும் தனது கணவர் உயிரோடு இருந்தபோது கொடுத்த நகைகளை சின்னப்பொண்ணு பத்திரமாக வைத்திருந்தார். மேலும் முனுசாமி இறப்பதற்கு முன்பு கொடுத்த பணத்தை சின்னப்பொண்ணு சிலருக்கு வட்டிக்கு கொடுத்து இருந்தார். இதனால் அவருக்கு போதிய வருமானம் கிடைத்தது. அதுமட்டுமின்றி அவர், ஆடுகளையும் மேய்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரம் ஆகியும், சின்னப்பொண்ணு வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர், கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் சின்னப்பொண்ணு கதவை திறக்கவில்லை. இதையடுத்து அந்த பெண், வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சின்னப்பொண்ணு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் நைலான் கயிற்றால் கட்டப்பட்டு வாயில் துணியை வைத்து திணிக்கப்பட்டிருந்தது.
அவரை யாரோ கொலை செய்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இந்த சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டவரின் உடலை பார்வையிட்டனர்.
சின்னப்பொண்ணு கழுத்து, காது, மூக்கு ஆகியவற்றில் அணிந்திருந்த நகைகள் மற்றும் அவர் வீட்டில் வைத்திருந்த நகைகள், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், சின்னப்பொண்ணுவின் கை, கால்களை நைலான் கயிற்றால் கட்டிப்போட்டு, அவர் சத்தம்போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து திணித்துள்ளனர். இதில் அவர் மூச்சுத்திணறி இறந்துள்ளார். இதையடுத்து அவர் அணிந்திருந்த நகையையும் வீட்டில் வைத்திருந்த நகைகளையும் மற்றும் பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேரில் வந்து, சின்னப்பொண்ணுவின் உடலை பார்வையிட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், சின்னப்பொண்ணு கழுத்து, காது, மூக்கில் நகைகள் அணிந்திருந்ததாலும், அவர் வட்டிக்கு பணம் கொடுத்ததை அறிந்த நபர்களே அவரை கொலை செய்து சுமார் 10 பவுன் நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அளவிலான பணத்தை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த வீட்டில் மோப்பமிட்ட அந்த நாய், அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்றது. பின்னர் அங்குள்ள விவசாய மோட்டார் கொட்டகை வரை சென்றுவிட்டு, அந்த நாய் மீண்டும் கொலை நடந்த வீட்டிற்கு வந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து, சின்னப்பொண்ணுவின் கை, கால்கள் மற்றும் கழுத்தில் பதிவாகி இருந்த ரேகைகளையும், வீட்டில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்து கொண்டனர்.
இதையடுத்து சின்னப்பொண்ணுவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story