காவிரி மேலாண்மை வாரியம் குறித்து விவாதிக்க டெல்லியில் நடைபெற இருந்த கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து


காவிரி மேலாண்மை வாரியம் குறித்து விவாதிக்க டெல்லியில் நடைபெற இருந்த கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து
x
தினத்தந்தி 17 March 2018 3:30 AM IST (Updated: 17 March 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து விவாதிக்க டெல்லியில் நடைபெற இருந்த கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

பெங்களூரு,

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து விவாதிக்க டெல்லியில் நடைபெற இருந்த கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த கூட்டம் 22-ந் தேதி நடைபெறும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

காவிரி நீர் பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் ஒதுக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோாட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் (பிப்ரவரி) 16-ந் தேதி இறுதி தீர்ப்பு கூறியது.

இதில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவை குறைத்து கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கப்பட்டது. இதை கர்நாடக அரசு உள்பட அரசியல் கட்சிகள் மற்றும் கன்னட அமைப்பினர் வரவேற்று கொண்டாடினர். காவிரி நீர் பிரச்சினையில் நீண்ட காலத்திற்கு பிறகு கர்நாடகத்திற்கு உரிய நியாயம் கிடைத்து இருப்பதாக அவர்கள் கருத்துகளை தெரிவித்தனர். அதே வேளையில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியத்தை...

இந்த விஷயத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு மவுனத்தை கலைத்த ஜனதா தளம்(எஸ்) தேசிய தலைவர் தேவேகவுடா, சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் கொண்டாடுவதற்கு ஒன்றும் இல்லை என்றும், இந்த விஷயத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெற்று கர்நாடக அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். எக்காரணம் கொண்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவே கூடாது என்றும் தேவேகவுடா வலியுறுத்தி வருகிறார்.

கர்நாடக அரசும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளதாகவும், இதில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முடியாது என்றும் கூறி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அணைகளை நிர்வகிக்கும் உரிமை பறிபோய்விடும் என்றும் கர்நாடக அரசு அஞ்சுகிறது.

மறுஆய்வு மனு தாக்கல்


இதற்கிடையே காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பு பற்றி விவாதிக்க கடந்த 8-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெற்று அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்யும் ஆலோசனையை கர்நாடக அரசு கைவிட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது குறித்து ஆலோசிக்க கர்நாடக எம்.பி.க்களின் ஆலேசனை கூட்டம் டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் 16-ந்தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று சித்தராமையா அறிவித்தார். இதற்காக அவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து

எம்.பி.களின் கூட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில் அந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக சித்தராமையா நேற்று காலை டெல்லியில் கூறினார்.

இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சில காரணங்களால் இன்று (அதாவது நேற்று) கூட்டப்பட்டு இருந்த காவிரி தொடர்பான கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும். இந்த விஷயத்தை பொறுத்தவரையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படியே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்“ என்றார்.

Next Story