பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 March 2018 5:00 AM IST (Updated: 17 March 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 360 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை,

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழக, ஆந்திர அரசுகள் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தை வகுத்தன. அதன்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 2-ந்தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. முதலில் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டனர். பின்னர் 2,450 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

புழல் ஏரிக்கு திறப்பு

இந்த நிலையில் கண்டலேறு அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 600 கனஅடி வீதம் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 140 கனஅடி வீதம் வந்துகொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை ஏரியின் நீர்மட்டம் 30.85 அடியாகவும், 1,943 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பும் உள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

முதலில் வினாடிக்கு 100 கனஅடி வீதம் திறக்கப்பட்டது. பின்னர் வினாடிக்கு 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை முதல் மேலும் கூடுதலாக திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 360 கனஅடி தண்ணீர் புழல் ஏரிக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. 

Next Story