8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி மாவட்டத்தில் 20 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன


8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி மாவட்டத்தில் 20 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 17 March 2018 3:30 AM IST (Updated: 17 March 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி கடலூர் மாவட்டத்தில் 20 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

கடலூர், 

தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் சினிமா படம் திரையிடும் பணியை தனியார் டிஜிட்டல் நிறுவனம் செய்து வருகிறது. இதற்கான கட்டணத்தை குறைக்கக்கோரி தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்களை திரையிடவில்லை. இதனால் சினிமா தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பல்வேறு தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால் தியேட்டர்கள் வெறிச்சோடின.

இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தியேட்டர்களை 16-ந்தேதி முதல் மூடப்போவதாக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி கடலூர் மாவட்ட சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் அறிவித்தனர். இதன்படி நேற்று கடலூரில் உள்ள 4 சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. இதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 20 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

இது பற்றி மாவட்ட தியேட்டர்கள் உரிமையாளர் சங்க தலைவர் ஜெயராமன் கூறுகையில், தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். பராமரிப்பு கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும், தியேட்டர் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி மாவட்டத்தில் உள்ள 20 தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். மூடப்பட்ட விவரம் ரசிகர்களுக்கு தெரியும் வகையில் அனைத்து தியேட்டர்கள் முன்பும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

Next Story