தர்கா வளாகத்தில் உள்ள கோவிலில் சூலாயுதம் வைத்ததால் வாக்குவாதம் வருவாய்த்துறையினர் அகற்றினர்
தர்கா வளாகத்தில் உள்ள கோவிலில் சூலாயுதம் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் தகராறு ஏற்பட்டது.
காஞ்சீபுரம்,
பெரிய காஞ்சீபுரம் செங்கழுநீரோடை வீதியில் அமீத் அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவின் பின்பகுதியில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில் கடுவெளி சித்தர் கோவில் உள்ளது.
இந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிவலிங்கம் இருந்ததாகவும், அதனை கடுவெளி சித்தர் பூஜை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானதால் அந்த இடத்தில் கோவில் கட்டிடம் எதுவும் எழுப்பாமல் வழிபாடு மட்டும் செய்யலாம் என்று 2 தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கடுவெளி சித்தரின் அவதார தினத்தையொட்டி சுமார் 100 கிலோ எடைகொண்ட உடுக்கையுடன் கூடிய 10 அடி உயரமுள்ள பிரமாண்டமான பித்தளை சூலாயுதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி முஸ்லிம்கள் திரண்டு வந்து ஆட்சேபனை செய்து அந்த சூலாயுதத்தை அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
50 பேர் கைது
இதுகுறித்து இருதரப்பினரும் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன், வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ, தாசில்தார் நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் வருவாய்த்துறையினர் அந்த சூலாயுதத்தை அகற்ற போவதாக தெரிவித்தனர். இதனையடுத்து இந்து அமைப்பினர் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து பஜனை பாடல்களை பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
சூலாயுதம் அகற்றம்
கடுவெளி சித்தர் கோவில் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
நள்ளிரவில் வருவாய்த்துறையினர் அந்த சூலாயுதத்தை அகற்றி எடுத்துச்சென்று காஞ்சீபுரம் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
Related Tags :
Next Story