எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 21 ஆயிரத்து 929 பேர் எழுதினர்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 21 ஆயிரத்து 929 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 17 March 2018 5:40 AM IST (Updated: 17 March 2018 5:40 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 21 ஆயிரத்து 929 பேர் எழுதினர்.

நாகப்பட்டினம்,

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தமிழ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு அடுத்த மாதம் 20-ந்தேதி வரை நடக்கிறது. நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 712 மாணவர்கள், 11 ஆயிரத்து 217 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 929 பேர் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு எழுதினர். 533 பேர் தேர்வு எழுதவரவில்லை. நாகை கல்வி மாவட்டத்தில் 40 தேர்வு மையங்களும், மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 46 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை வசதி, காற்றோட்டம், கழிவறை வசதி, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு பணியில் தலைமையாசிரியர்கள் 97 பேரும், ஆசிரியர்கள் ஆயிரத்து 174 பேரும், அலுவலக பணியாளர்கள் 344 பேரும், 156 போலீசார் என மொத்தம் ஆயிரத்து 771 பேர் ஈடுபடுகின்றனர். தேர்வு பணிகளை கண்காணிப்பதற்காக 64 நிலையான படைகளும், 18 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் தரைதளத்தில் தேர்வு எழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கண்பார்வையற்ற 65 தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 22 மாற்றுத்திறனாளி மாணவ-மணவிகளுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் செல்போனை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட தேர்வர்கள் அன்றைய தேர்வினை தொடர்ந்து எழுத இயலாது. ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.மேலும், தேர்வர்களின் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்திட பள்ளிக்கல்வி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரிபாய், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார் ராகவன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story