சாலை விதிமீறல் இல்லா சமூகம் படைப்போம்!


சாலை விதிமீறல் இல்லா சமூகம் படைப்போம்!
x
தினத்தந்தி 17 March 2018 10:45 AM IST (Updated: 17 March 2018 10:31 AM IST)
t-max-icont-min-icon

குண்டும் குழியுமாக காட்சி தரும் நகர சாலைகளில் வாகனங்களை செலுத்துவது சவாலானதாகும்.

சாலையில் வாகனங்கள் பெருகிவரும் அதே வேளையில் வாகனங்களை ஓட்டும் பலரிடம் ஒழுக்கமின்மையும் பெருகி வருகின்றது. சாலையில் வாக்குவாதங்கள், தேவையில்லாமல் அதிக வேகத்தில் ஓட்டுவது, ஒலிப்பான்களை (ஹாரன்) அடித்துக்கொண்டே ஓட்டுவது, சிவப்பு விளக்கு ஒளிர்ந்தும் சீறிப்பாய்வது, பச்சை விளக்கு ஒளிரும் முன்பே பாய்ந்து செல்வது, இருசக்கர வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றி செல்வது, நினைத்த இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, குடித்துவிட்டும், போதைபாக்குகளை மென்று கொண்டும் வண்டி ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது என இது மாதிரி இன்னும் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன.

வாகனங்களை இயக்குபவர்கள் முறைப்படி பயிற்சி எடுத்துதான் ஓட்டுநர் உரிமம் பெறுகிறார்களா? என சந்தேகம் ஏற்படும் அளவிற்கு பலரின் செயல்பாடுகள் உள்ளன. பெரும்பாலும் வாகன நெரிசலுக்கு ஒருவரின் தவறான செயலே காரணமாக இருக்கும். சிறிய இடம் கிடைத்தாலும் நுழைந்து அனைவரையும் பரிதவிக்க வைப்பார்கள். இப்போதெல்லாம் ஒழுங்காக வண்டி ஓட்டி வருபவர்களை தாறுமாறாக வருபவர்கள் தான் இடித்துவிட்டு முறைக்கிறார்கள். ஆம்புலன்சுகளுக்கு வழி விடுவதில்லை. ஆம்புலன்ஸ் செல்லும்போது பக்கவாட்டிலோ அல்லது பின்புறமோ ஒட்டிக்கொண்டு செல்கிறார்கள்.

அப்படி வருபவர்களுக்கு, தான் விதிமீறலாக வண்டி ஓட்டுகிறோம் என்பது கூட தெரிவதில்லை. சொன்னாலும் புரிவதில்லை. எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே குறை கூறும் நாம் சட்டம் வகுத்து கொடுத்த விதிகளின்படி நடக்கிறோமா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் அங்கு வாகனங்கள் வரிசையாக செல்வதையும், ஒழுங்கையும் கண்டு வியந்து, நம் நாட்டில் அதுபோன்ற சாலைகளும் இல்லை; ஓட்டுபவர்களிடம் ஒழுக்கமும் இல்லை என வருந்துகிறார்கள்.

நாமும் அவன் போகிறான், இவன் மட்டும் இப்படி செய்கிறான் என விதிகளை மீறாமல் நகரங்களிலும், நான்குவழி சாலைகளிலும் முறையாக வாகனங்களை ஓட்டினால் அடுத்த தலைமுறைக்குள் போக்குவரத்து விதிமீறல்கள் இல்லா நாடாக நம் நாடும் உருவெடுக்கும். பெற்றோரும், ஆசிரியர்களும் போக்குவரத்து விதிகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். நாம் ஒழுக்கமடைந்துவிட்டால் சாலைவசதியையும், இன்னும் பிற வசதிகளையும் உரிமையோடு கேட்டுப்பெறலாம்.

-பொ.மு.ஜெகதீஷ், ஈரோடு


Next Story