இந்தியர்களுக்கு வேட்டு வைக்கும் சவுதியின் ‘விஷன் 2030’


இந்தியர்களுக்கு வேட்டு வைக்கும் சவுதியின் ‘விஷன் 2030’
x
தினத்தந்தி 17 March 2018 5:30 AM GMT (Updated: 17 March 2018 5:15 AM GMT)

வளைகுடா நாடுகளில் மிகவும் வசதி வாய்ந்த நாடாகவும், கட்டுப்பாடுகள் நிறைந்த நாடாகவும் இருப்பது சவுதி அரேபியா. இங்கு இத்தனை ஆண்டுகளாக வரி என்பது கிடையாது. பொதுமக்களிடம் இருந்து எதற்காகவும் வரி வசூலிக்கப்பட்டதில்லை.

கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக சவுதியில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அதாவது, கச்சா எண்ணெய் விலை 15 சதவீதம் குறைந்ததை அடுத்து, பொருளாதார வளர்ச்சி 12.7 சதவீதம் சரிவை சந்தித்தது.

மேலும், சவுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேவையும் அதிகரித்தது. அதாவது, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) கடந்த ஆண்டு புள்ளிவிவரப்படி, சவுதி அரேபியாவில் 15 வயது முதல் 24 வயது வரை 32.6 சதவீதம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கிறார்கள்.

இதனால், ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க முடியாமல் சவுதி அரசு திணறியது. இந்த நிலையில், இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதியின் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார். 35 வயதான சல்மான், ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தார். குறிப்பாக அரச குடும்பத்தில் ஊழல் பேர்வழிகள் என்று அறியப்பட்டவர்களை கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிரடியாக கைது செய்தார். அரசு, தனியார் துறைகளில் சவுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவும் முடிவு செய்தார்.

இவற்றுக்காக பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் ‘விஷன்-2030’ என்ற திட்டத்தை பிரகடனப்படுத்தினார். இது, எண்ணெய் வள பொருளாதாரம் தவிர்த்த பிற துறைகள் மூலம் வருமானத்தை மேம்படுத்துவற்கான முயற்சி என உலக நாடுகளுக்கு காண்பிப்பதற்கான திட்டம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, முதல்முறையாக கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி சவுதி அரேபியாவில் பெட்ரோல் உள்பட அனைத்து பொருட்களுக்கும் 5 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டது.

விஷன் 2030-ன் முக்கிய குறிக்கோள், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக செங்கடலில் ரூ.50 ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் பொருளாதார மண்டலம் அமைப்பது தான். இதற்கு நியோம் (என்.இ.ஓ.எம்.) என்று பெயரிட்டுள்ளனர். இந்த விஷன் 2030 முஹம்மது பின் சல்மானின் அரசியல் யுக்தி என்றும், எண்ணெய் வளம் சாராத தனியார் துறைகளுக்கான வளர்ச்சி திட்டம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 40 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை தனியார் பங்களிப்புக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2030-ல் பல்வேறு துறைகளில் 55 லட்சம் புதிய பணியிடங்களில் தொழிலாளர்கள் தேவைப்படுவர். ஆனால், சவுதி இளைஞர்கள் அரசுப்பணிகளில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றனர். அத்துடன் அதிக சம்பளத்தையும் எதிர்பார்க்கின்றனர். இது சவுதி அதிகார வர்க்கத்தை கலக்கமடைய செய்துள்ளது. மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பத்தை பொறுத்தே இந்த திட்டம் வெற்றியடையும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

விஷன்-2030 குறித்து உலக நாடுகளின் பார்வை வேறு விதமாக உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதில் முதலீடு செய்வதற்கான 190 உலக நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா 92-வது இடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நிதி ஆணையம் (ஐ.எம்.எப்.) சவுதியின் இந்த திட்டத்தில் இன்னும் மனநிறைவு அடையவில்லை என்கிறது.

ஏற்கனவே, அங்குள்ள பொருளாதார வளர்ச்சி திட்டங்களில் உள்ள முக்கிய குறைபாடுகள் இன்று வரை சரி செய்யப்படவில்லை. குறிப்பாக அரசியல் ஸ்திரத்தன்மை முதலீட்டாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அவர்கள் சட்டத்தின் ஆட்சி, ஊழலற்ற நிர்வாகம், குறைவான கெடுபிடிகள், வணிகத்தில் அரசின் தலையீடு குறைவாக இருக்க வேண்டும் என்பது போன்றவற்றை எதிர்பார்க்கிறார்கள்.

சவுதியில் தற்போது, இந்தியர்கள் உள்பட ஒரு கோடியே 20 லட்சம் வெளிநாட்டினர் பல்வேறு துறைகளில் வேலைபார்த்து வருகின்றனர். விஷன்-2030 திட்டத்தால் இவர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த திட்டத்தால் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் வேலையை இழப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக செல்போன் விற்பனை, சர்வீஸ், சிம்கார்டு விற்பனை ஆகிய துறைகளில் பிற நாட்டினருக்கான அனுமதியை கடந்த ஓராண்டுக்கு முன்பு சவுதி அரசு தடை செய்தது. இந்த துறையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிக அளவு இருந்தனர். அவர்கள் அனைவரும் வேலையிழந்தனர்.

தற்போது மேலும் 12 துறைகளில் பிறநாட்டினருக்கான வேலைவாய்ப்பு உரிமையை தடை செய்துள்ளது. அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் முதல், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்கள், ரெடிமேடு ஆடை கடைகள், வீடு மற்றும் அலுவலகங்களுக்கான பர்னிச்சர் கடைகள், வீட்டு உபயோக பொருள்கள் விற்பனையகங்கள் ஆகியவற்றில் பிற நாட்டினருக்கு அனுமதி கிடையாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், வருகிற நவம்பர் மாதம் முதல், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை, கடிகாரங்கள் விற்பனை, கண்கண்ணாடி விற்பனை ஆகியவற்றிலும், வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மருத்துவ உபகரணங்கள் விற்பனை மற்றும் வினியோகம், கட்டுமான பொருட்கள் விற்பனை, ஆட்டோ, கார் உதிரி பாகங்கள் விற்பனை, தரைவிரிப்பு விற்பனை, சாக்லெட், கேக் உள்ளிட்ட இனிப்பு வகை கடைகளிலும் வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட வேலைகளை பார்த்து வருவோருக்கு இது தொடர்பாக நோட்டீசும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் சவுதி அரசு அறிவித்த நாட்களுக்கு பிறகு மேற்கண்ட துறைகளில் வேலை செய்து வரும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் அத்தனை பேரும் வேலை இழக்கும் அபாயம் நீடிக்கிறது.

சவுதியின் விஷன் 2030 திட்டம், அந்நாட்டுக்கு கைகொடுக்குமா? இல்லையா? என்பது ஆராயப்பட வேண்டியது. ஆனால், அந்த திட்டம் அங்கு வேலை செய்யும் இந்தியர்களுக்கு நிச்சயம் வேட்டு வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

-இப்னு ரஷிதா, மதுரை

Next Story