தலைமை மலர்ந்திட வழிதான் என்ன?


தலைமை மலர்ந்திட வழிதான் என்ன?
x
தினத்தந்தி 17 March 2018 11:15 AM IST (Updated: 17 March 2018 10:57 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசியலில் இப்போது அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை ‘வெற்றிடம்’. சரி, தவறு என்பதைத் தாண்டி இப்படியொரு கருத்து எழுவதற்கான காரணம், தமிழ்நாட்டு அரசியலின் மையப்புள்ளிகளாக இருந்த இரண்டு தலைவர்கள் இப்போது களத்தில் இல்லை.

ஒரே நேரத்தில் எதிரெதிரான இரு முனைகளிலும் ஏற்பட்டிருக்கும் இந்த வெற்றிடம் முன் எப்போதும் இல்லாதது. புதுப்புது கட்சிகள் ஆரம்பிக்கப்படுவதாலோ, பதவிகள் வழங்கப்படுவதாலோ அல்லது எடுத்துக்கொள்ளப்படுவதாலோ மட்டுமே யாரும் தலைவர்களாகி விட முடியாது என்பதை வரலாறு பலமுறை சிவப்பு மையால் அடிக்கோடிட்டு காட்டி இருக்கிறது.

தமிழ்நாட்டில் இப்படியொரு நிலை ஏற்பட என்ன காரணம்? கோளாறு ஆரம்பித்தது எங்கே?

ஆலமரம் போல விழுது பரப்பி நின்ற காங்கிரஸ் கட்சியை வீழ்த்திவிட்டு வீரியமாய் எழுந்த திராவிட இயக்கத்தின் வளர்ச்சியிலேயே அதற்கான விடை அடங்கியிருக்கிறது. கட்சி நீடித்து, நிலைத்து நிற்க சிந்தனைத்திறனும் செயலாற்றலும் நிறைந்த இரண்டாம் நிலை தலைவர்கள் முக்கியம் என்று நினைத்தார் அண்ணா. அறிவுஜீவிகளை அரவணைத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர்களது ஆலோசனைகளைக் காது கொடுத்து கேட்டார்.

ஆளாளுக்கு கருத்து சொல்லிவிட்டால், தனக்கான இடம் பறிபோய்விடுமே என்று அவர் நினைக்கவில்லை. தம்பிகளை எல்லாம் தலைவர்களாக அடையாளப்படுத்தினார். பொதுவெளியில் பெரும் மரியாதையைப் பெற்றுத்தரும் வகையில் ஒவ்வொருவருக்கும் பெயரோடு சேர்த்து ஓர் அடைமொழி கொடுக்கப்பட்டது.

சம்பத், சொல்லின் செல்வரானார். நெடுஞ்செழியன், நாவலரானார். கருணாநிதி, கலைஞரானார். அன்பழகன், பேராசிரியரானார். எம்.ஜி.ராமச்சந்திரன் புரட்சித்திலகம் ஆனார். இப்படி ஒற்றைத் தலைவருக்கே சிறப்பு என்றில்லாமல் எல்லாருக்கும் ஏதோ ஒருவகையில் முக்கியத்துவம் கிடைத்தது.

இன்னும் ஒரு படி மேலாக, தான் மட்டும் தான் எழுத வேண்டும்; அதை மற்றவர்கள் படிக்க வேண்டும். தான் மட்டுமே பேச வேண்டும்; அதை எல்லாரும் கேட்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. தனக்கு இணையாக இரண்டாம் நிலை தலைவர்களும் பேச, எழுத வேண்டுமென்று ஆசைப்பட்டார். அப்படியே அவர்களை உருவாக்கினார்.

‘அய்யய்யோ இவன் வளர்ந்துவிட்டால் ஆபத்தாகிவிடுமே’ என்று அண்ணா நினைக்கவில்லை. அவரது ஆளுமை மீது அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. தன்னுடைய ஆற்றல் மற்றும் உழைப்பின் உயரம் அவருக்குத் தெளிவாக தெரிந்தது. அதனால்தான் துணிச்சலாக, ‘தம்பி வா தலைமை ஏற்க வா, உன் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம் வா...’ என்று தனக்கு கீழே இருந்த ஒருவரைத் துணிச்சலாக பொது மேடையில் அவரால் அழைக்க முடிந்தது.

உண்மையான தலைவன் இப்படிதான் இருப்பான். எத்தனை பேர் முட்டுக்கொடுத்தாலும் தன் மீதே நம்பிக்கை இல்லாத ஒருவரால் எப்படி தலைவராக நீடித்து நிற்க முடியும்?

இங்கே அண்ணாவைப்போல தேசிய அளவில் ஆட்சியையும் கட்சியையும் நடத்தியவர் ஜவகர்லால் நேரு. இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத் தலைவர்களின் பட்டியலில் இடம் பிடித்த நேரு, தன்னை எதிர்த்தவர்கள், தன்னை விட மேலானவர்கள், சரி சமமானவர்கள் என எல்லாரையும் அரவணைத்ததால்தான் பெரும் தலைவராக நிலைத்திருக்க முடிந்தது.

தமிழ்நாட்டுக்கு ஒரு காமராஜர், கர்நாடகாவுக்கு ஒரு நிஜலிங்கப்பா என மாநிலத்திற்கு மாநிலம் வலுவான மக்கள் தலைவர்கள் தம் கட்சியின் முகங்களாக இருக்க வேண்டும் என்று நேரு மனதார விரும்பினார். அவர்களது கருத்துகளுக்கு மரியாதை கொடுத்து முடிவுகளை எடுத்தார். நேருவுக்கு அவரது ஆளுமை மீது இருந்த ஆணித்தரமான நம்பிக்கையே அதற்கு காரணம்.

ஆனால் அடுத்தடுத்து வந்த தலைவர்கள், அவர்களின் முகத்தைத் தவிர வேறு எவரும் வந்துவிட்டால் தமக்கு ஆபத்து என்று நினைத்தார்கள். கட்சிக்கு மட்டுமல்ல; நாட்டுக்கே தன் முகத்தை அடையாளமாக்க நினைத்ததன் விளைவு அந்த கட்சி சரிவை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இன்றிருப்பதில் இந்தக் கட்சி; அந்தக் கட்சி என்ற விதிவிலக்குகளோ, வேறுபாடுகளோ இல்லை. எந்தக் கட்சியை வேண்டுமானாலும் பாருங்கள். ஆளுமைத் திறனோடு இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லை என்பது பளிச்சென தெரியும். கட்சியின் உள்ளரங்க கூட்டங்களிலும், தலைவர்கள் உடனான தனிப்பட்ட சந்திப்புகளிலும் ஆரோக்கியமான மாற்றுக் கருத்துகளை, எதிர் வாதங்களை எடுத்து வைக்கும் ஆற்றல் கொண்ட தலைவர்கள் இப்போது இருக்கிறார்களா?

முகத்திற்கு நேராக ‘நீங்கள் செய்வது தவறு தலைவரே’ என்று சொல்கிற அறிவும் செறிவும் நிறைந்தவர்களைத் தலைவர்களும் பக்கத்தில் வைத்துக்கொள்வதில்லை. ஏனெனில் கருத்துப் பரிமாற்றத்திற்கும் கொள்கை மாறுபாட்டுக்குமான வித்தியாசம் அவர்களுக்குப் புரியவில்லை. ‘நான் இல்லாமல் கட்சியின் பொதுக்கூட்டத்தைக் கூட நடத்தக்கூடாது’ என்று உத்தரவு போடும் பலவீனமானவர்களே இப்போது கட்சிகளை நடத்தும் தலைவர்களாக இருக்கிறார்கள்.

‘ஓர் அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கிறான்; ஒரு சிறந்த தலைவன் அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்கிறான்’ என்பார்கள். இங்கே தலைமுறை என்பது மக்களை மட்டுமே குறிப்பதல்ல. தன் கட்சியை, சித்தாந்தத்தை காலங்கள் தோறும் உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டிய அடுத்த நிலை தலைவர்களையும் சேர்த்தே சொல்கிறது.

அப்படி நினைப்போரே தமக்கு கீழே நல்ல தலைவர்களை உருவாக்குகிறார்கள். காலத்தால் உருவாகி, தன் மீது நம்பிக்கை கொண்ட தலைவர்கள், நல்ல தலைவர்களை அடையாளம் காட்டுகிறார்கள். வலிந்து திணிக்கப்படுகிற அல்லது உருவாக்கப்படுகிற, தன் திறமை மீதே அரைகுறை நம்பிக்கை கொண்டிருக்கும் தலைவர்கள், கால வெள்ளத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.

தலைமைப் பண்புகளுடன் லட்சம் பேர் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஒருவன்தான் தலைவனாக இருக்க முடியும். நெருக்கடியான சூழலில் காலம் கொஞ்சம் தடுமாறினாலும், அத்தகைய தகுதி மிகு தலைவனை அடையாளம் காட்ட அது தவறியதே இல்லை.

- எழுத்தாளர், கோமல் அன்பரசன்

Next Story