பிரான்ஸ் நாட்டை வலம் வரத் தயாராகும் ‘மோனலிசா’!


பிரான்ஸ் நாட்டை வலம் வரத் தயாராகும் ‘மோனலிசா’!
x
தினத்தந்தி 17 March 2018 1:00 PM IST (Updated: 17 March 2018 12:31 PM IST)
t-max-icont-min-icon

சுமார் 500 ஆண்டுகளாக பாரீசின் லூவர் அருங்காட்சியகத்துக்குள்ளேயே அடைந்து கிடக்கும் லியனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் பிரான்ஸ் நாடெங்கும் வலம் வர உள்ளது.

பிரான்சின் கலாசாரத்துறை அமைச்சரான பிரான்காய்ஸ் நைசன் கூறுகையில், நடமாடும் பொருட்காட்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபரை சந்தித்து இந்த விஷயம் பற்றிப் பேச உள்ளதாகக் கூறும் அவர், இத்தகைய கலை வடிவங்கள் ஓர் இடத்துக்குள் அடைத்து வைக்கப்படக்கூடாது என்று தான் கருதுவதாகக் கூறியுள்ளார்.

ஓவியர்களையே வியக்கவைக்கும் மோனலிசாவின் புதிர் புன்னகை, உலகெங்கிலும் உள்ள லட்சக் கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளது.

மோனலிசா ஓவியம் கவர்ந்திருப்பது ரசிகர்களை மட்டுமல்ல, கலைப்பொருட்களின் பண மதிப்பை அறிந்த ஆட்களையும்தான்.

அதனாலேயே, 1911-ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த ஒருவரால் இந்த ஓவியம் திருடிச் செல்லப்பட்டுவிட்டது.

பின்னர் மீட்கப்பட்ட மோனலிசா படம், 1963-ம் ஆண்டில் சில மாதங்களை அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க்கில் கழித்தது.

பின்னர் 1974-ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ, ரஷியாவின் மாஸ்கோவையும் மோனலிசா ஒரு சுற்று சுற்றி வந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு இத்தாலியின் பிளாரன்ஸ் நகரம், தங்கள் ஊருக்கு மோனலிசா ஓவியத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது மட்டும் அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஒருவேளை இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரே முன்பு மோனலிசாவை திருடிச் சென்றார் என்ற கசப்பான ஞாபகம் பிரான்சுக்கு வந்திருக்கக்கூடும்.

காலங்கள் கடந்தும் மங்காத மோனலிசா புன்னகைக்கு என்றும் தனி மதிப்பு இருக்கிறது!

Next Story