திருவெண்ணெய்நல்லூர் அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் தொழிலாளி குத்திக் கொலை
திருவெண்ணெய்நல்லூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அறுங்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் பரசுராமன்(வயது 25). இவரும் இவருடைய அண்ணன் மணிகண்டனும் (28) அவ்வப்போது வெளியூருக்கு கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.
அதன்படி கேரளாவுக்கு வேலைக்கு சென்ற அவர்கள் 2 பேரும் கோவில் திருவிழாவிற்காக நேற்று முன்தினம் காலை திருவெண்ணெய்நல்லூருக்கு வந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை காண பரசுராமன் சென்றார்.
அப்போது குடிபோதையில் இருந்த பரசுராமன், அங்கிருந்த சிலரிடம் வீண் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அறிந்த ஏழுமலை, மணிகண்டன் ஆகிய இருவரும் அங்கு விரைந்து சென்று பரசுராமனிடம், எதற்காக தேவையில்லாமல் தகராறு செய்கிறாய் என்று திட்டி அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு பரசுராமன், தனது தந்தையிடம் சென்று என்னை ஏன் கோவில் திருவிழாவிற்கு செல்லவிடாமல் தடுக்கிறீர்கள் என்று கேட்டு தகராறு செய்தார். உடனே அங்கு வந்த மணிகண்டன், தனது தம்பி பரசுராமனை தடுத்து நிறுத்தி தட்டிக்கேட்டார். அப்போது ஏழுமலை, மணிகண்டன் ஆகிய இருவரையும் பரசுராமன் தகாத வார்த்தையால் திட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், அருகில் கிடந்த கத்தியை எடுத்து தனது தம்பி என்றுகூட பாராமல் பரசுராமனின் வயிறு, மார்பு ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் பரசுராமன் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதில் பயந்துபோன மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், பிரகாஷ், பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பரசுராமனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அதே கிராமத்தில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் மணிகண்டன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று மணிகண்டனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story