சாலை விரிவாக்க பணிகளை செய்து போக்குவரத்து நெரிசலை குறைக்கவேண்டும்


சாலை விரிவாக்க பணிகளை செய்து போக்குவரத்து நெரிசலை குறைக்கவேண்டும்
x
தினத்தந்தி 18 March 2018 3:30 AM IST (Updated: 18 March 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருநின்றவூர் முதல் பாடி வரையிலான சாலை விரிவாக்க பணிகளை செய்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவடி,

சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், பாடி என முக்கிய பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இந்த பகுதிகளில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை இருப்பதால் அன்றாடம் இந்த சாலையில் ஆயிரக்கணக்கில் கார், ஆட்டோ, பஸ், லாரி, மோட்டார் சைக்கிள், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் செல்கின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை இரு வழி பாதையாக இருந்தது. அப்போது வாகனங்கள் குறைவு. போக்குவரத்து நெரிசல் அந்தளவுக்கு இல்லை. தற்போது வாகனங்கள் பெருகிவிட்டன.

மேலும் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை சாலை ஓரங்களை ஆக்கிரமித்து கடைகள், மற்றும் விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனத்தை கடைகளுக்கு முன்பு சாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர்

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகள், விளம்பர பதாகைகள் அகற்றப்படாமல் உள்ளது. அன்றாடம் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பாடி, அம்பத்தூர், திருநின்றவூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அதன்படி, திருத்தணி முதல் பாடி வரை 81.6 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து வந்த திருத்தணி முதல் திருநின்றவூர் வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமும், திருநின்றவூர் முதல் பாடி வரை உள்ள சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறையிடமும் கடந்த 2013-ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.

இதில் திருநின்றவூர் முதல் திருத்தணி வரையிலான சாலை அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தது. தனியார் ஒப்பந்த நிறுவனம் சாலை விரிவாக்க பணியை செய்து வருகிறது.

திருநின்றவூர் முதல் பாடி வரை இரு வழி பாதையாக இருந்த சாலை 4 வழி பாதையாக மாற்ற ரூ.98 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திருநின்றவூர் முதல் பாடி வரை உள்ள 22 கிமீ தூரத்துக்கு நில எடுப்பு செய்து சாலை நடுவே தடுப்புச்சுவர் அமைத்து 4 வழி பாதையை முடித்து விட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு தமிழக சட்ட சபையில் மறைந்த முதல்-அமைச்சர்  ஜெயலலிதா 110 விதியின் கீழ் திருநின்றவூர் முதல் பாடி வரை 6 வழி சாலையாக மாற்றப்படும் என்றும் அதற்காக ரூ.168 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது.

தற்போது சாலையில் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரில் இருந்து சாலையின் இரு புறங்களிலும் சுமார் 50 அடி வரை நிலம் எடுக்க வேண்டும். அப்படி இரு புறங்களிலும் 50 அடி என்று மொத்தம் 100 முதல் 120 அடிக்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பின்னர் 6 வழி பாதையாக சாலை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் நில எடுப்புக்கான பணியை வருவாய்த்துறை அதிகாரிகள் தான் செய்ய வேண்டும்.

அவர்கள் எந்தெந்த பகுதியில் சாலை ஓரங்களில் நில எடுப்பு உள்ளது என்று ஆய்வு செய்து முறையாக நில எடுப்பு செய்து அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர் தான் 6 வழி பாதையாக மாற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் செய்ய முடியும். அதற்கான தகவலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வருவாய்த்துறையினர்் தா ன் நில எடுப்புக்கான பணியினை செய்ய வேண்டும் அல்லது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நில எடுப்புக்கென்று தனி தாசில்தார் ஒருவரை நியமித்து நில எடுப்பு செய்து முறையாக நெடுஞ்சாலைத் துறையினரிடம் ஒப்படைத்தால் தான் 6 வழி பாதை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கி விரைவில் 6 வழி சாலை அமைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் போக்குவரத்து நெரிசலில் இருந்து சுலபமாக செல்ல ஏதுவாக இருக்கும். எனவே விரைந்து சாலை விரிவாக்க பணிகளை செய்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story