சோழவந்தான் அருகே மயானப்பாதை ஆக்கிரமிப்பால் வைகை ஆற்றுக்குள் உடலை புதைக்கும் நிலை


சோழவந்தான் அருகே மயானப்பாதை ஆக்கிரமிப்பால் வைகை ஆற்றுக்குள் உடலை புதைக்கும் நிலை
x
தினத்தந்தி 18 March 2018 3:30 AM IST (Updated: 18 March 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் அருகே ஆதி திராவிடர்களுக்கு சொந்தமான சுடுகாடு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி போட்டு அடைத்து உள்ளதால் இறந்தவர்களின் உடலை வைகை ஆற்றுக்குள் புதைக்கும் நிலை உள்ளது.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி சின்ன இரும்பாடி காலனி கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இந்த் கிராமத்தில் இறந்தவர்களின் உடலை சுமார் 2 கிலோ மீட்டர் துாரமுள்ள வைகை ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் வைத்து சடங்குகள் செய்து எரியூட்டல் மற்றும் புதைப்பு உள்ளிட்ட காரியங்கள் செய்து வந்தனர்.

இந்த் நிலையில் மயானத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து முள்வேலி போட்டு அடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக இந்த கிராமத்தில் இறந்தவர்கள் உடலை எடுத்துச் சென்று எரியூட்டல் மற்றும் புதைப்பு உள்ளிட்ட காரியங்கள் செய்ய முடியவில்லை. வைகை ஆற்றுக்குள் உடலை புதைக்கும் நிலை உள்ளது.

இது குறித்து சின்ன இரும்பாடியை சேர்ந்த ஆதி என்பவர் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக தனிநபர் ஒருவர் சுடுகாடு செல்லும் பாதையில் முள்வேலி அமைத்து தடுத்து விட்டார். இறந்தவர்களின் உடல்களை வைகைஆற்றிற்குள் புதைத்துவிட்டு வருகின்றோம். இதுபற்றி வாடிப்பட்டி யூனியன் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

மேலும் எரியூட்டல் கொட்டகை மிகவும் சேதமாகி பயன்படுத்த முடியாமல் உள்ளது. தார்ச்சாலை சேதமாகி உள்ளதால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு சிரமமாக இருகிறது.

எரியூட்டல் தொடர்பான சிரமத்தை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Next Story