சைக்கிளில் உலகம் சுற்றும் வெளிநாட்டு தம்பதி


சைக்கிளில் உலகம் சுற்றும் வெளிநாட்டு தம்பதி
x
தினத்தந்தி 18 March 2018 4:00 AM IST (Updated: 18 March 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

சைக்கிளில் உலகம் சுற்றும் வெளிநாட்டு தம்பதியினர் ராமேசுவரம் வந்தனர்.

ராமேசுவரம்,

இத்தாலியை சேர்ந்தவர் அலசாண்ட்ரோ (வயது33), அவருடைய மனைவி ஷிபானியா. வெளிநாட்டு தம்பதிகளான இவர்கள் இருவரும் நீளமான சைக்கிளில் உலகம் சுற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று ராமேசுவரம் வந்தனர். அங்கு கோவிலில் பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தை பார்த்து ரசித்தனர். பின்னர் தனுஷ்கோடி- அரிச்சல்முனை சாலை யை பார்வையிட்டனர். அப்போது அலசாண்ட்ரோ கூறியதாவது:- இத்தாலியில் வனத்துறையில் பணியாற்றி வருகிறேன். எனது மனைவி ஷிபானியா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். உலக நாடுகளை சைக்கிளிலேயே சென்று சுற்றிப்பார்க்க ஆசை ஏற்பட்டது. அதற்காக 2 பேர் அமர்ந்து ஓட்டும் நீளமான சைக்கிளை தேர்வு செய்து இத்தாலியில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி உலக நாடுகளை சுற்றிப்பார்க்க புறப்பட்டோம். குரோசியா, கிரீஸ், துருக்கி, ஈரான், துர்பெகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்றுவிட்டு இந்தியாவில் உள்ள கொச்சின் பகுதிக்கு வந்தடைந்தோம்.

அங்கிருந்து கேரளா, மூணாறு வழியாக மதுரை வந்து ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் வந்துள்ளோம். இந்திய மக்களின் வாழ்க்கை முறை கலாசாரம், மக்களின் மரியாதை, அவர்களின் ஒற்றுமையும் எங்களை கவர்ந்துள்ளது. கோவிலில் உள்ள ஒரே மாதிரியான 1212 தூண்களை கொண்ட 3-ம் பிரகாரம் பார்ப்பதற்கு பிரமிப்பாக உள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து விட்டு தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சைக்கிளிலேயே செல்ல முடிவு செய்துள்ளோம். இதுவரை 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளோம். எங்களது சுற்றுலா பயணத் தை வருகிற 2020-ம் ஆண்டில் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். நீளமான சைக்கிளில் ராமேசுவரத்தில் வலம் வந்த வெளிநாட்டு தம்பதியினரை பொதுமக்களும்,சுற்றுலா பயணிகளும் வியந்து பார்த்தனர்.

Next Story