தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தடைசெய்யப்பட்ட பூச்சி மருந்துகள் கடத்தல்? கேரள அதிகாரிகள் வாகன சோதனை


தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தடைசெய்யப்பட்ட பூச்சி மருந்துகள் கடத்தல்? கேரள அதிகாரிகள் வாகன சோதனை
x
தினத்தந்தி 18 March 2018 3:45 AM IST (Updated: 18 March 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட பூச்சிமருந்துகள் கடத்தி செல்லப்படுகிறதா என்பது குறித்து கம்பம்மெட்டு எல்லைப்பகுதியில் கேரள விவசாயத்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.

கம்பம்,

கேரள எல்லைப்பகுதியையொட்டி கம்பம் அமைந்துள்ளது. இதனால் கேரளாவுக்கு கம்பம் வழியாக இறைச்சிக்காக மாடுகள், கோழிகள், காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர். மேலும் கேரளாவில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஏலக்காய் விவசாயம் நடைபெறுகிறது.

இதற்கு தேவையான பூச்சிமருந்து, உரம் ஆகியவை தேனி, போடி, கம்பம் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் பொருட்களையும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் பொருட்களையும் சோதனை செய்வதற்காக எல்லையில் இரு மாநில சோதனை சாவடிகள் உள்ளன.

இந்நிலையில் கேரளாவில் தடை செய்யப்பட்ட பூச்சிமருந்துகள் தமிழகத்திலிருந்து கடத்துவதாக கேரள விவசாயத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம்மெட்டு சோதனை சாவடியில் கேரள விவசாயத்துறை இணை இயக்குனர் ஜேக்கப் பி.மாணி தலைமையில் அதிகாரிகள் தமிழகத்திலிருந்து வரும் வாகனங்களை சோதனை செய்தனர்.

இதுகுறித்து கேரள விவசாயத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:-

கேரள மாநிலத்தில் ‘எண்டோசல்பான்‘ என்ற பூச்சிக்கொல்லி மருந்து தடை செய்யப்பட்டுள்ளது. அந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் கடந்த சில மாதங்களாக, கூலித்தொழிலாளர்கள் மூலமாகவும், வாகனங்கள் மூலமாகவும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து கேரள எல்லை கம்பம்மெட்டு பகுதியில் தமிழகத்திலிருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. ஆனால் இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட பூச்சிமருந்துகள் கடத்தி செல்லவில்லை. இதே போல் தொடர்ந்து வாகன சோதனை நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story