மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ


மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ
x
தினத்தந்தி 18 March 2018 2:45 AM IST (Updated: 18 March 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் மின்கம்பி உரசியதால் தீப்பிடித்தது. இதன் காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழனி,

பழனியை சேர்ந்தவர் முத்து (வயது 45). லாரி டிரைவர். நேற்று மதியம் இவர் தனது லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் இருந்து தொப்பம்பட்டி அருகே உள்ள புளியம்பட்டிக்கு சென்றுகொண்டிருந்தார். மயிலாடும்பாறை பாலம் அருகே வந்த போது, சாலையின் குறுக்காக சென்ற மின்சார கம்பியில் வைக்கோல் உரசியதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் வைக்கோல் முழுவதிலும் தீ பரவியது. இதை கவனித்த டிரைவர் உடனே லாரியை சாலையோரத்தில் நிறுத்தினார். அவர் இறங்கிய அடுத்த நொடியே தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே லாரியில் தீப்பற்றி எரிவதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனே பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் வைக்கோலில் இருந்து தீ புகைந்து கொண்டே இருந்ததால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து லாரியில் இருந்த வைக்கோல்லை அப்புறப்படுத்தி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில் லாரி லேசாக சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story