உங்கள் மீதான மதிப்பும், பெருமையும் பெருக நல்வழியில் செயல்பட வேண்டும் திருநங்கைகளுக்கு மாவட்ட நீதிபதி அறிவுரை
தமிழ்நாட்டில் உங்கள் மீதான மதிப்பும், பெருமையும் பெருக நல்வழியில் செயல்பட வேண்டும் என்று திருநங்கைகளுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு ஆகியவை இணைந்து திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் உலக மகளிர் தின விழா நடத்தப்பட்டது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜி.மகிழேந்தி தலைமை தாங்கினார். தலைமை குற்றவியல் நீதிபதி ஆர்.நாராஜா, சார்பு நீதிபதி கே.ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் ஆர்.கவிதா வரவேற்றார்.
திருநங்கைகளுக்கு அரசு எத்தனையோ உரிமைகளை வழங்கி உள்ளது. வடமாநிலங்களில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் அந்த வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கிற சுமங்கலியாக திகழ்வது திருநங்கைகள் தான்.
வட மாநிலங்களில் பின்பற்றப்படும் அந்த அற்புதமான நம்பிக்கையை போல, தமிழ்நாட்டிலும் உங்கள் மீதான மதிப்பும், பெருமையும் பெருக நீங்கள் நல்வழியில் செயல்பட வேண்டும்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருநங்கைகளுக்கு சமூக நலத்துறை சார்பில் அடையாள அட்டையை மாவட்ட நீதிபதி வழங்கினார். இதையடுத்து திருநங்கைகளிடம் மாவட்ட நீதிபதி குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அலுவலர் (இலக்கு பணிகள்) ஜெகதீசன், சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டீனா டார்த்தி, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் ரூபா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை மற்றும் போளூர் இலக்கு பணிகள் திட்ட மேலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story