வீட்டில் விளக்கேற்றாததை கண்டித்ததால் விபரீதம்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


வீட்டில் விளக்கேற்றாததை கண்டித்ததால் விபரீதம்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2018 3:00 AM IST (Updated: 18 March 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் விளக்கேற்றி வைக்காததை, தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே மங்கலம்-ஏம்பலம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன், லாரி அதிபர். இவருடைய மனைவி வசந்தி. இவர்களுடைய மகள் மலர்விழி (வயது 21), இவர் வில்லியனூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை முருகனும், அவருடைய மனைவி வசந்தியும் கடலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் இரவு 7 மணி அளவில் அவர்கள் வீட்டுக்கு திரும்பினார்கள். அப்போது வீட்டில் சாமி படத்துக்கு முன்பு விளக்கு ஏற்றி வைக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனைப் பார்த்த வசந்தி, வீட்டில் இருந்த மகள் மலர்விழியை அழைத்து வெள்ளிக்கிழமை அதுவுமாக சாமி விளக்கை ஏற்றி வைக்காமல் இருக்கிறாயே என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.

அதனால் மனமுடைந்த மலர்விழி படுக்கை அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டி அங்கு மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். வெகுநேரமாக மகள் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் படுக்கை அறைக்கதவு தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்றபோது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினர்.

அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு மலர்விழியை டாக்டர் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி மலர்விழி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியிலும், அவருடன் படித்து வரும் சக மாணவிகள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story