மாணவனை பள்ளியில் வைத்து பூட்டிச் சென்ற சம்பவம்: தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்


மாணவனை பள்ளியில் வைத்து பூட்டிச் சென்ற சம்பவம்: தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 18 March 2018 5:15 AM IST (Updated: 18 March 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல் பள்ளியை பூட்டிச் சென்ற சம்பவத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பாசிரியை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார். மேலும் பள்ளி ஆய்வாளர் களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

திருக்கனூர்,

திருக்கனூரை அடுத்த பி.எஸ்.பாளையம் இருளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 10) பி.எஸ்.பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 14-ந் தேதி மாணவன் வேல்முருகன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான். மாலையில் மாணவன் வகுப்பறையில் தூங்கிவிட்டான்.

இந்த நிலையில் மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவன் வகுப்பறையில் தூங்குவதை அறியாமல் பள்ளியை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். மாலை 5-30 மணி அளவில் தூக்கம் கலைந்து எழுந்த மாணவன் பள்ளி பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, பள்ளியின் கிரில்கேட்டில் ஏறி நின்று அலறினான்.

மாணவனின் அலறல் சத்தம்கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். மேலும் அதுபற்றி திருபுவனை போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வந்து பள்ளியின் கிரில்கேட் பூட்டை உடைத்து மாணவனை மீட்டனர்.

மாணவனை பள்ளியில் வைத்து பூட்டிச்சென்ற சம்பவத்தை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் மறுநாள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுபற்றி தகவல் அறிந்ததும் கல்வித்துறை வட்ட ஆய்வாளர் பக்கிரிசாமி விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவன் இருப்பது தெரியாமல் பள்ளியை பூட்டிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இந்தநிலையில் பள்ளியில் மாணவன் இருப்பது தெரியாமல் பள்ளியை பூட்டிச்சென்ற சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் குமார் நடவடிக்கை எடுத்து பி.எஸ்.பாளையம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா, வகுப்பாசிரியை கலைவாணி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த பிரச்சினையை தொடர்ந்து பள்ளி கல்வி இயக்குனர் குமார், வட்ட ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாணவர்களின் பாதுகாப்பு என்பது பள்ளி நிர்வாகத்துக்குத் தான் முழு பொறுப்பு. இது தொடர்பாக கீழ்கண்ட உத்தரவுகளை வரும் காலத்தில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இது அவர்களுடைய கடமையாகும். பள்ளி வேலை நேரத்தில் கடைசி வகுப்பு எடுக்கக் கூடிய ஆசிரியர் வகுப்பறையை பூட்டுவதற்கு முன்பு எல்லா மாணவர்களும் வெளியேறி விட்டார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

கடைசி பாட வேளை முடிந்த பின்னர் மாணவர்களை தங்களுடைய பாடபுத்தகங்களுடன் நீண்ட வரிசையில் நிற்க செய்து, அவர்கள் வரிசையாக வகுப்பறையில் இருந்து வெளியேறுவதை கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறிய பிறகு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் யாரேனும் உள்ளே உள்ளனரா? என மறு ஆய்வு செய்ய வேண்டும்.

சிறப்பு வகுப்பு எடுக்கும் போது வகுப்புகள் முடிந்த பின்னர் மாணவர்கள் அனைவரும் பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிவிட்டார்களா? என்பதை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும். சிறப்பு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர்களுக்கு உரிய தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story