வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சம்பவம் லாரி மோதி போக்குவரத்து போலீஸ் ஏட்டு சாவு


வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சம்பவம் லாரி மோதி போக்குவரத்து போலீஸ் ஏட்டு சாவு
x
தினத்தந்தி 18 March 2018 3:55 AM IST (Updated: 18 March 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு லாரி மோதியதில் பரிதாபமாக இறந்தார்.

பெங்களூரு,

பெங்களூருவில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு லாரி மோதியதில் பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

போலீஸ் ஏட்டு சாவு

பெங்களூரு பேடராயனபுரா போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வந்தவர் ரவிசங்கர் (வயது 29). நேற்று மதியம் சுமார் 12.45 மணியளவில் ரவிசங்கரும், ஊர்க்காவல் படை வீரருமான வெங்கூப் ராவ் ஆகியோர் ஒசகெரேஹள்ளி அருகே உள்ள நைஸ் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த லாரி ரவிசங்கர், வெங்கூப் ராவ் ஆகியோர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், ரவிசங்கர் சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு கம்பி மீது தூக்கி வீசப்பட்டார். இரும்பு கம்பியில் தலை மோதியதால் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். ஊர்க்காவல்படை வீரர் வெங்கூப் ராவ் காயம் அடைந்தார்.

லாரி டிரைவருக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பேடராயனபுரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த வெங்கூப் ராவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த ரவிசங்கரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story