குழந்தை திருமணங்களை பொதுமக்கள் தடுக்க வேண்டும்


குழந்தை திருமணங்களை பொதுமக்கள் தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 March 2018 4:03 AM IST (Updated: 18 March 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை பொதுமக்கள் தடுக்க வேண்டும் என்று கலெக்டர் சுந்தரவல்லி வேண்டுகோள் விடுத்தார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கொளத்தூர் ஊராட்சியை சேர்ந்த கோனேட்டம்பேட்டை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி பேசினார். திருத்தணி எம்.எல்.ஏ. நரசிம்மன் முன்னிலை வகித்தார். முகாமில் கலெக்டர் சுந்தரவல்லி பேசும்போது கூறியதாவது.

பள்ளிப்பட்டு ஆஸ்பத்திரியில் பல குறைபாடுகள் உள்ளதாக இங்கே சிலர் எனக்கு தெரிவித்தனர். இந்த குறைபாடுகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும். பொதுமக்களுக்கு தற்போது ஸ்மார்ட் கார்டு, விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அட்டைகள் எந்தெந்த வகையில் பயன்படுகின்றன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தை திருமணம் கூடாது என்று அரசு வற்புறுத்தி கூறியுள்ளது. பெண்களுக்கு திருமண வயது 18, ஆண்களுக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதை விட்டு குறைந்த வயதில் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு தாலுகாவில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. கடந்த ஒரு மாதத்தில் பள்ளிப்பட்டு தாலுகாவில் 2 பெண்குழந்தைகளின் திருமணங்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவை பள்ளிப்பட்டு தாசில்தார் மூலமாக தடுத்து நிறுத்தப்பட்டது.

குழந்தை திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் மானிய விலையிலான இருசக்கர வாகனம் 1,246 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முகாமில் 627 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகள், வீட்டுமனை பட்டாக்கள் ஸ்மார்ட் கார்டுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுந்தரவல்லி, எம்.எல்.ஏ.வும், தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவருமான நரசிம்மன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் திருத்தணி ஆர்.டி.ஓ.ஜெயராமன் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சீனிவாசன், திருவள்ளூர் மாவட்ட பால்வள தலைவர் வேலஞ்சேரி சந்திரன், தாசில்தார் தமிழ் செல்வி, தனி தாசில்தார் லட்சுமணன், வட்ட வழங்கல் அலுவலர் வெண்ணிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளிப்பட்டு சார்பதிவு அலுவலகம், சார் கருவூலக அலுவலகங்களுக்கு கட்டிடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய ராஜேந்திரபிரசாத்தை பாராட்டி அவருக்கு கலெக்டர் சுந்தரவல்லி பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து பாராட்டு பத்திரம் வழங்கினார்.


Next Story