சத்தியமங்கலம் மலைப்பகுதியில் வறட்சியிலும் பூத்துக்குலுங்கும் லாவண்டர் பூக்கள்


சத்தியமங்கலம் மலைப்பகுதியில் வறட்சியிலும் பூத்துக்குலுங்கும் லாவண்டர் பூக்கள்
x
தினத்தந்தி 18 March 2018 3:30 AM IST (Updated: 18 March 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் கடும் வறட்சியிலும் லாவண்டர் பூக்கள் பூத்துக்குலுங்குகிறது.

பவானிசாகர்,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கழுதைப்புலி, காட்டெருமை, மான், செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. வனப்பகுதியில் தண்ணீரும் இல்லை. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியைவிட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.

வனப்பகுதியில் வனவிலங்குகளில் தாகத்தை தீர்ப்பதற்காக வனத்துறையினர் ஆங்காங்கே தொட்டிகள் அமைத்து குடிநீர் நிரப்பி வருகிறார்கள். தற்போது வனப்பகுதியில் உள்ள மரம், செடிகள் காய்ந்து கருகி விட்டன. இருப்பினும் வனப்பகுதியில் ஒருசில இடங்களில் லாவண்டர் பூக்கள் அதிகஅளவில் பூத்துக்குலுங்குகின்றன. குறிப்பாக சத்தியமங்கலம் - மைசூர் சாலை, ஆசனூர்-கொள்ளேகால் சாலை, திம்பம் - தலமலை சாலை ஆகிய வனச்சாலை ஓரங்களில் லாவண்டர் மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மரங்களிலும் லாவண்டர் பூக்கள் பூத்துக்குலுங்குகிறது.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், சத்தியமங்கலம் வனப்பகுதியில் லாவண்டர் பூக்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில்தான் பூத்துக்குலுங்கும். அதன்படி தற்போது வனப்பகுதி மற்றும் சாலையோரங்களில் லாவண்டர் பூக்கள் பூத்து உள்ளதுடன், கண்களை கவரும் வகையில் அழகாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் லாவண்டர் பூக்களை ரசிக்கிறார்கள். மேலும் அவர்கள் தங்களுடைய கேமராக்களில் புகைப்படம் எடுத்துச் செல்கிறார்கள் என்றனர்.

Next Story