நிலத்தகராறில்,மின்சாரம் பாய்ச்சி கணவன்-மனைவி கொலையா?


நிலத்தகராறில்,மின்சாரம் பாய்ச்சி கணவன்-மனைவி கொலையா?
x
தினத்தந்தி 18 March 2018 4:14 AM IST (Updated: 18 March 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லி அருகே நிலத்தகராறில் மின்சாரம் பாய்ச்சி கணவன்-மனைவி கொலை செய்யப்பட்டனரா? என்று விவசாயியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கெங்கவல்லி,

கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 55). இவருடைய மனைவி சம்பூர்ணம் (47). லட்சுமணனின் அண்ணன் ராமர் (55) விவசாயி. இருவரும் இரட்டையர்கள் ஆவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள தோட்டத்து கிணற்றின் அருகில் கணவன், மனைவி 2 பேரும் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்த லட்சுமணனின் அண்ணன் ராமர் கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது லட்சுமணனும், சம்பூர்ணமும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. கணவனும், மனைவியும் மின்சாரம் தாக்கியதில் பலியானார்களா? அல்லது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லட்சுமணனின் நிலமும், ராமரின் நிலமும் அருகருகே உள்ளது. இதன் காரணமாக அவர்கள் 2 பேருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ராமர், அவர்களை மின்சாரம் பாய்ச்சி கொன்றாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முழுவதும், விடிய, விடிய அவரிடம் போலீசார் துருவி, துருவி தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையின் போது ராமர், தான் 3 நாட்களாக ஊரில் இல்லை என்றும், வெளியூர் சென்று இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ராமர் ஆட்களை ஏவி, அவர்களை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? கணவன்-மனைவி 2 பேரும் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தான் இறந்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

மேலும் லட்சுமணன் தோட்டத்தில் உள்ள 2 தென்னை மரங்களுக்கு இடையே மின் கம்பி கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து அந்த கம்பிகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு மின்கம்பியை கட்டி மின்இணைப்பு கொடுத்தது யார்? மின் இணைப்பு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story