அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையாளர் பாரி பேட்டி


அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையாளர் பாரி பேட்டி
x
தினத்தந்தி 18 March 2018 3:30 AM IST (Updated: 18 March 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையாளர் பாரி கூறினார்.

ஈரோடு, 

ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படை மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கான ஆய்வுக்கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு தெற்கு ரெயில்வே பாதுகாப்பு படையின் தலைமை பாதுகாப்பு ஆணையாளரும், ஐ.ஜி.யுமான எஸ்.சி.பாரி தலைமை தாங்கினார். அவர் பாதுகாப்பு படை போலீசார் மற்றும் சிறப்புப்படை வீரர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும், ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதுடன், பயணிகளுக்கு தேவையான சேவைகளையும் செய்ய வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினார். முன்னதாக ஈரோடு ரெயில் நிலையம், ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படை அலுவலகம், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

தற்போது ரெயில் குற்றங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படை உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜோலார்பேட்டையில் இருந்து கோவை வரையான கண்காணிப்புக்கு இந்த படை ஈரோட்டில் நிறுவப்பட்டு உள்ளது. பாதுகாப்பு சிறப்பு படையினர் இரவு நேர ரெயில்களில் அனைத்து பெட்டிகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓடும் ரெயிலில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது, ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள்.

ரெயிலில் உள்ள மகளிர் பெட்டிகளில் தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது. இதன் மூலம் மகளிர் பாதுகாப்பாக பயணம் செய்ய முடிகிறது. மாற்றுத்திறனாளிகள் பெட்டியிலும் பிறர் பயணம் செய்வது தடுக்கப்பட்டு இருக்கிறது.

நிர்பயா நிதியின் கீழ் தெற்கு ரெயில்வேயில் 136 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. சேலம் கோட்டத்தில் 5 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் முழுமையாக கேமரா பொருத்தும் பணிகள் முடிந்து, பரீட்சார்த்த முறையில் செயல்பட்டு வருகிறது. மற்ற ரெயில் நிலையங்களில் விரைவில் பணிகள் தொடங்கும். அதுமட்டுமின்றி மத்திய ரெயில்வே மந்திரியின் அறிவிப்பின் படி இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த பணிகள் இன்னும் 6 மாதங்கள் அல்லது ஒரு ஆண்டில் தொடங்கும். இந்த பணிகள் முடிந்து விட்டால், அனைத்து ரெயில் நிலையங்களும், ரெயில்களும் கேமராக்கள் கண்காணிப்பின் கீழ் வரும்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்றவாளிகளை கண்டறிவது சுலபமாக இருக்கும். தற்போது தெற்கு ரெயில்வேயில் 20 ரெயில் நிலைய குற்றங்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

ரெயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.5 கோடியே 78 லட்சம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ரெயில்வே பாதுகாப்பு படையும் இந்த விசாரணையில் தீவிரமாக இறங்கி உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் துர்காபூர், மொகல்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் 6-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் சில தகவல்கள் கிடைத்து உள்ளன. ஆனால் நம்பகத்தன்மையான தகவல்கள் இல்லாததால் உறுதி செய்யப்படவில்லை.

ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக ‘182’ என்ற இலவச அழைப்பு எண் வழங்கப்பட்டு உள்ளது. இதில் வரும் அழைப்புகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதுகாப்பு மட்டுமின்றி ரெயிலில் உள்ள பொது பிரச்சினைகள் குறித்தும் பயணிகள் இந்த எண்ணில் புகார் தெரிவிக்கிறார்கள். அதையும் நாங்கள் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அனுப்பி வைக்கிறோம்.

இவ்வாறு தலைமை பாதுகாப்பு ஆணையாளர் எஸ்.சி.பாரி கூறினார்.

Next Story