வயோதிகத்தை வெல்லும் வாழ்க்கைக் கலை


வயோதிகத்தை வெல்லும் வாழ்க்கைக் கலை
x
தினத்தந்தி 18 March 2018 1:15 PM IST (Updated: 18 March 2018 12:37 PM IST)
t-max-icont-min-icon

கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தனது கைவண்ணத்தில் கலை படைப்புகளாக உருவாக்கி வீட்டை கண்காட்சி கூடமாக மிளிர வைத்திருக்கிறார், ஆரிபா மொய்து.

ஆரிபா மொய்து கைகளில் எந்த பொருளை கொடுத்தாலும் அதற்கு புதிய கலைவடிவம் கொடுத்து ஆச்சரியப்பட வைக்கிறார். இவருடைய வீட்டுக்குள் நுழைந்தால் திரும்பிய பக்கமெல்லாம் கண்களை கொள்ளைகொள்ளும் விதவிதமான கைவினைப்பொருட்கள் நம்மை வரவேற்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை உல்லன் நூலை மூலப் பொருளாகக்கொண்டவை. ஊசியால் கலைப் பொருட்களாக மாறியவை.

ஆரிபாவின் கற்பனைகளுக்கும், கைவிரல்களின் ஜாலங்களுக்கும் வண்ணங்களின் பின்னல்களாக நூல்கள் இசைந்து கொடுத்து அழகுருவம் பெறுகின்றன. உல்லன் டேபிள் மேட்டுகள் அதில் குறிப்பிடத்தக்கவை. குஷன் தலையணைகளும் இவரால் புது வடிவம் பெற்றிருக்கின்றன. இளம் பெண்களை கவரும் ஹேண்ட் பேக்குகள், பர்ஸ்கள், செல்போன் கவர்கள், வளையல்கள் போன்றவை எல்லாம் உல்லன் நூல்களில் மாறுபட்ட கலைப்படைப்புகளாக மிளிர்கின்றன. வீணாகும் பொருட்களையெல்லாம் அறைக்கு அழகு சேர்க்கும் அலங்கார பொருட்களாக மாற்றி விடுகிறார். வீட்டில் எந்த பொருளையும் வீணானது என்று குப்பை தொட்டியில் போடுவதில்லை என்கிறார்.

சென்னை வேளச்சேரியில் வசிக்கும் ஆரிபாவுக்கு வயது 68. வயோதிகத்தை தாண்டிய உற்சாகமும், சுறுசுறுப்பும் இவருடைய கைவிரல்களில் வெளிப்படுகின்றன. உல்லன் நூல், ஊசி மட்டுமல்ல சாதாரண ஊசி, நூலை பயன்படுத்தியும் குழந்தைகளுக்கான ஆடைகளை வடிவமைத்துவிடுகிறார். அவை தையல் மிஷின்களில் தைக்கப்பட்டது போன்றே நேர்த்தியாக காட்சி யளிக்கின்றன. ஏராளமான நிறங்களை கொண்ட துணிகளை ஒன்று சேர்த்து தைத்து போர்வை ஒன்றையும் உருவாக்கியுள்ளார். அதனை கின்னஸ் சாதனைக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். 40-க்கும் மேற்பட்ட உல்லன் நூல்களின் நிறங்களை பயன்படுத்தியும் போர்வை தயாரித்திருக்கிறார்.

ஆரிபா வீட்டை அழகுபடுத்தும் அலங்கார வேலைப்பாடுகள் மீது கவனம் செலுத்த தொடங்கி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. கணவரின் எதிர்பாராத இழப்பும், அதனால் ஏற்பட்ட தனிமைத்துயரமும் ஆரிபாவை கலைவேலைப்பாடுகள் மீது கவனம் பதிக்க வைத்திருக்கிறது.

‘‘என் கணவரின் இழப்பு என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. 53 வருடங்கள் என்னுடைய சுக, துக்கங்களில் பங்கெடுத்தவரின் பிரிவை என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அவர் நினைவுடனேயே ரொம்ப நாட்கள் சாப்பிடாமல் பட்டினியாக கிடந்தேன். அல்சர் பிரச்சினையால் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். உடல் நலம் தேறினாலும் மனம் சகஜநிலைக்கு திரும்பவில்லை. கணவரின் நினைவாகவே இருந்ததால் மன அமைதிக்காக சில நாட்கள் வேறு இடத்தில் தங்குமாறு டாக்டர்கள் கூறினார்கள்.

துபாயில் வசிக்கும் என் மகள் வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கினேன். அப்போது கணவரை பிரிந்த பெண்மணி ஒருவர் கதை, கவிதைகள் எழுதி மன ஆறுதல் தேடிக்கொண்டிருப்பதை கேள்விப்பட்டேன். எனக்குள்ளும் அதுபோன்ற மாற்று சிந்தனை எழுந்தது’’ என்கிற ஆரிபா சிறுவயதில் ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் மிகுந்தவராக இருந்திருக்கிறார். கையில் எந்த பொருள் கிடைத்தாலும் அதைக்கொண்டு வித்தியாசமான பொருட்களை செய்து பார்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். அதனையே வயோதிக காலத்தில் தனது மனதுக்கு நிம்மதி தேடித்தரும் அஸ்திரமாக கையில் எடுத்திருக்கிறார்.

குக்கர் கேஸ்கட்டில் பைகள், பெண்கள் தலையில் அணியும் ரப்பர் பேண்டில் டேபிள் மேட், பிளாஸ்டிக் பாட்டில்களில் உல்லன் நூல்களை பயன்படுத்தி பிளவர் வாஷ், ஈக்கு குச்சிகளை பயன்படுத்தி வீணான பொருட்களில் பூக்கள், பூங்கொத்துக்கள் என விதவிதமாக அலங்கார பொருட்களை உருவாக்கியுள்ளார். இவருடைய வீட்டு சூட்கேஸ்களில் புடவை களுக்கு பதிலாக கலைப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன. ஆரிபாவை நலம் விசாரிக்க வருபவர்களில் பெரும்பாலானோர் ஊசியையும், நூலையும் பரிசாக கொடுக்கிறார்கள். அதனை கொண்டு ஏதாவது ஒரு கலைப்படைப்பை உருவாக்கி அவர்களுக்கே திருப்பி கொடுத்துவிடுகிறார். தனது குடும்பத்தினர் பிறந்தநாளுக்கு தன் கைவண்ணத்தில் விதவிதமான பொருட்களை உருவாக்கி பரிசாக கொடுக்கிறார். தான் கைகளால் தைக்கும் ஆடைகளைதான் பேரன், பேத்திகள் உடுத்துவதாக பெருமிதம் கொள்கிறார்.

‘‘என் வீட்டுக்கு அருகில் இருக்கும் டெய்லர் கடைக்கு சென்று வீணான துணிகளை எடுத்து வந்து பிராக் ஒன்றை தைத்தேன். அதை டெய்லரிடம் கொண்டு போய் காண்பித்தேன். அவர், ‘எப்படி நீங்கள் கையாலேயே இவ்வளவு அழகாக தைத்தீர்கள்’ என்று ஆச்சரியப்பட்டு போனார். பேரன் பேத்திகளுக்கு தைத்து கொடுக்கும் ஆடைகளில் உல்லன் நூலால் டிசைன் செய்கிறேன். விநாயகர் சதுர்த்தியையொட்டி பிள்ளையார் சிலை தயார் செய்து உல்லன் நூலால் குடை அமைத்திருந்தேன். பக்கத்துவீட்டில் வசிப்பவர் அதனை வாங்கிசென்றுவிட்டார். அருகில் வசிக்கும் இன்னொரு குடும்பத்தினருக்காக கிறிஸ்தவ ஆலயத்தை வடிவமைத்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை கடவுள் ஒருவரே. நம்முடைய வழிபாட்டு முறைகள்தான் வேறுபடுகிறது. அக்கம், பக்கத்தினரின் நலம் விசாரிப்பும், ஊக்கமும் என்னை மகிழ்ச்சியான மனநிலையில் கலைவேலைப்பாடுகள் மீது கவனம் செலுத்த வைக்கிறது’’ என்கிறார்.

ஆரிபாவின் ஆரம்பகால வாழ்க்கை கைவினைப்பொருட்களுடனும், கலை வேலைப்பாடுகளுடனும்தான் தொடங்கியிருக்கிறது.

‘‘சிறுவயதில் கரியால் வீட்டு சுவர்களில் ஓவியம் தீட்டுவேன். அதை பார்த்து எனது அம்மா திட்டுவார். சாக்லேட் சாப்பிட்டால் பேப்பரை தூக்கி வீசாமல் அதில் ஏதாவது ஒரு டிசைன் செய்துவிடுவேன். உடுத்தும் உடைகளிலும் ஏதாவது டிசைன் சேர்த்து தைப்பேன். ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எனது ஆசிரியை தனது மகளுக்கு ஓணம் பண்டிக்கைக்காக புதுத்துணி எடுத்திருந்தார். பண்டிகைக்கு சில நாட்களே இருந்ததால் டெய்லர் துணி தைத்து கொடுக்கமுடியாது என்று கூறிவிட்டார். அதனால் ஆசிரியர் வருத்தத்தோடு இருந்தார். நான் அவரிடம் துணியை வாங்கி சென்று கையாலேயே தைத்து கொடுத்தேன். அதை பார்த்து ஆசிரியர் ஆச்சரியப்பட்டு போனார். எனக்கு ஒரு பாக்கெட் சாக்லேட்டும், ஒரு ஊசியும் பரிசாக வழங்கினார். அவர் கொடுத்த ஊசியை என்னுடைய சொத்தாக கருதினேன். அதை பயன்படுத்தி நிறைய கலைப்பொருட்களை உருவாக்கினேன்’’ என்கிற ஆரிபா, 15 வயதில் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அதன்பிறகு குடும்ப பொறுப்பே அவரது முழுநேர வேலையாகிவிட்டது.



‘‘எனது பூர்வீகம் கேரள மாநிலம் தலைச்சேரி. டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது. என் குடும்பத்தினரும் அதற்குதான் ஆசைப்பட்டார்கள். ஆனால் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது நல்ல இடத்தில் இருந்து சம்பந்தம் வந்தது. அதை கைவிட மனமின்றி எனக்கு திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். எனது கணவர் முஸ்தபாவும் தலைச்சேரியை சேர்ந்தவர். எங் களுக்கு ஒரு மகள், மூன்று மகன்கள் இருக்கிறார்கள். குழந்தைகள் பிறந்ததும் அவைகளை வளர்த்து ஆளாக்குவதிலேயே என் முழு நேரமும் கழிந்தது. அதனால் ஊசி, நூலுக்கு ஓய்வு கொடுத்திருந்தேன்’’ என்கிற ஆரிபா, முதலில் தாயாரை இழந்தபோதும் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார். அப்போதும் கலைதான் இவரை மீட்டு இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வந்திருக்கிறது.

‘‘குழந்தைகள் வளர்ந்து ஆளாகிக்கொண்டிருந்த நேரத்தில் எனது தாயார் இறந்துபோய்விட்டார். அவரை நினைத்து உடலையும், மனதையும் வருத்திக்கொண்டிருந்தேன். என்னால் இயல்புநிலைக்கு திரும்பிவர முடியவில்லை. அந்த சமயத்தில் எனது கணவரின் உறவினர்கள் சென்னையில் வசித்து வந்தார்கள். என்னை சகஜநிலைக்கு கொண்டு வருவதற்காக என் கணவர் பிள்ளைகளுடன் என்னை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். இங்குதான் எனது கலை விஸ்வரூபம் எடுத்தது.

கணவரின் இழப்பு என்னை ரொம்பவும் வாட்டியது. மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் எல்லோரும் என்னிடம் அன்பு காட்டினாலும் தனிமை உணர்வு என்னை ஆட்கொண்டுவிட்டது. என்னை தங்களுடன் சேர்த்து வசிக்குமாறு பிள்ளைகளும், பேரன், பேத்திகளும் வலியுறுத்துகிறார்கள். எனக்கு என் கணவர் கட்டிய வீட்டை விட்டு வேறு இடத்தில் வசிக்க மனமில்லை. மலேசியா, அமெரிக்கா, தாய்லாந்து, துபாய் என பல்வேறு நாடுகளுக்கு சென்றுவந்தேன். அங்கெல்லாம் கிடைக்காத மன அமைதி சென்னையில் கலைப்பொருட்களை தயார் செய்வதில் முழுமையாக கிடைக்கிறது.

பல நிறங்கள் கொண்ட போர்வை தைப்பதற்கு முயற்சித்தபோது பொழுது கழிந்ததே தெரியவில்லை. துணிகளை சேர்த்து தைப்பதில் கவனம் முழுவதும் இருந்ததால் மனபாரம் குறைந்துபோய்விட்டது. உல்லன் நூல்களில் 42 நிறங்கள்தான் இருக்கிறது. அதை பயன்படுத்தியும் 100 நிறங்களை கொண்ட போர்வை தயாரிக்க முயற்சித்து வருகிறேன்’’ என்கிறார்.

தனிமை உணர்வுடன் வசிக்கும் பெண்களும், வயதானவர்களும் வீட்டு வேலை செய்யும் குடும்பத் தலைவிகளும் ஏதாவது ஒரு கைத்தொழிலை பழகிக்கொள்ள வேண்டும் என்கிறார், ஆரிபா. அது மன நிம்மதியையும், வருமானத்தையும் தேடி தரும் என் கிறார்.

‘‘இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. 10 ரூபாய் முதலீடு செய்தால் 20 ரூபாய் சம்பாதித்துவிடலாம். யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டியதில்லை. ஏதாவது ஒரு சுயதொழிலை கற்றுக்கொண்டால் போதும். தேவைக்கு பணம் கிடைத்துக்கொண்டிருக்கும். மன அமைதியும் கிடைக்கும். நிறைய குடும்ப பெண்கள் பொழுதை போக்க சிரமப்படுகிறார்கள். அக்கம், பக்கத்தவர்களிடம் தேவையில்லாத விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அது பிரச்சினையை உருவாக்கி விடும். அந்த பழக்கம் எனக்கு பிடிக்காது. எனக்கு ஊசியும், நூலும் பிடித்தமானது என்பதால் அதிலேயே நேரத்தை செலவிட பழகிக்கொண்டேன். அதனை கையில் எடுத்தால் போதும். வேறு எந்தவிதமான சிந்தனையும் எட்டிப்பார்க்காது. மகிழ்ச்சியாக நான் நினைத்ததை எல்லாம் கலைப்படைப்பாக உருவாக்கிவிடுவேன்” என்கிறார்.

கலை, ஆரிபாவின் வயோதிகத்தை மறக்கடிக்கும் மருந்தாக செயல்படுகிறது!

Next Story