கலெக்டராக நினைத்து ‘கடவுளானவர்’


கலெக்டராக நினைத்து ‘கடவுளானவர்’
x
தினத்தந்தி 18 March 2018 3:32 PM IST (Updated: 18 March 2018 3:32 PM IST)
t-max-icont-min-icon

சமூக சேவை என்பது சிலருடைய எண்ணத்தில் மட்டுமே உதிக்கக்கூடியது. பெயருக்காகவோ விளம்பரத்திற்காகவோ அதை செய்யாமல், சமூக அக்கறையோடு செய்பவர்கள் சிலர்தான். அவர்களில் ஒருவர் அஜித் சிங்.

ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பது, பாலியல் தொழிலில் இருப்பவர்களை அதில் இருந்து மீட்டு சமூகத்தோடு இணைப்பது, அவர்களது குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது போன்ற சிறப்பான பணிகளை அவர் செய்து கொண்டிருக்கிறார். அவரால் பலன் பெற்றவர்கள் அவரை தங்கள் கடவுள் என்று புகழ்கிறார்கள். ஆனால் அவர்களது ‘கடவுளான’ அஜித் சிங்க்கு இந்த சமூக சேவை தினமும் நெருப்போடு போராடி ஜெயிப்பது போல்தான் இருக்கிறது.

யார் இவர்?

அஜித் உத்தரபிரதேசத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரியின் மகன். சிறு வயதிலிருந்தே அஜித்தை கலெக்டர் ஆக்கிவிட வேண்டும் என்று துடித்தார் தந்தை. தனது மாவட்ட கலெக்டருக்கு கிடைக்கும் மரியாதை தன் மகனுக்கு கிடைக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார். லக்னோ போர்டிங் ஸ்கூலில் படித்து கொண்டிருந்த அஜித்திற்கு டெல்லியில் பெரிய கல்லூரியில் இடம் கிடைத்ததும் தன் கனவு பாதி நிறைவேறி விட்டதாக நினைத்து மகிழ்ந்தார். ஆனால் திடீரென்று அஜித் திசைமாறிப் போய்விட்டதால் தந்தை வெறுப்படைந்தார்.

எஸ். ஓ. எஸ். என்ற கிராமத்திற்கு சமூக சேவை செய்ய ஒரு தடவை அஜித் சென்றார். அங்கிருந்த மக்களின் நிலையை பார்த்து வேதனையடைந்தார். பெரும்பாலான பெண்கள் விலைமாதுகளாக மாற்றப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு வெளி உலகத்தோடு எந்த தொடர்பும் கிடையாது. அவர்களின் குழந்தைகளின் நிலையோ அவர்களை விட பரிதாபமானது. தான் தனி ஒருவனாக நின்று அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற முடியுமா என்று சிந்தித்தார்.

பெண்கள் பலர் அந்த இருட்டு உலகத்திலிருந்து வெளிவர துடித்தனர். ஆனால் உள்ளூரிலே அவர்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. அவர்களுடைய வாழ்க்கையே சபிக்கப்பட்ட வாழ்க்கையாக இருந்தது. அந்த கிராமத்திற்குள் நுழைவதே பாவம் என்று பலர் கருதினர். இந்த நிலையில் அஜித் களமிறங்கினார். அவர்களின் பரிதாப வாழ்க்கைக்கு முடிவுகட்ட முன்வந்தார். முதலில், பாலியல் தொழிலில் இருக்கும் பெண் களின் குழந்தைகளை தத்தெடுத்து சமூகத்தோடு இணைக்க முன்வந்தார். அதற்கு முதலில் அவரது வீட்டில் இருந்தே எதிர்ப்பு வந்தது. ஐதீக சிந்தனையில் ஊறிப்போன அவரது அம்மா, அந்த குழந்தைகள் தனது வீட்டிற்குள் நுழைவதையே எதிர்த்தார். அம்மாவிடம் தான் செய்யும் நல்ல காரியங்களை எவ்வளவோ எடுத்துச்சொல்லி பார்த்தார். அம்மா புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. ஆனால் அஜித் மனம் மாறவில்லை.

அந்த கிராமத்து பெண்கள், அருகில் உள்ள பெரிய மனிதர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு நடனமாடச் செல்வார்கள். அவர்களை, அந்த பெரிய மனிதர்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஆட வைப்பார்கள். அவர்களது நாட்டியத்தை பார்த்து ரசித்தவர்கள், அவர்களுக்கும் இதயம் இருக்கிறது என்று நினைத்துப்பார்க்க மறுத்தார்கள். தங்கள் மனைவிகளை பொக்கிஷம் போல் பாதுகாத்த அவர்கள், இந்த கிராமத்து பெண்களை போகப்பொருளாக்கினார்கள்.

அந்த பெண்கள், ஒருவேளை சாப்பாட்டிற்காக அப்படி பலர் முன் ஆட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதை நினைத்து வருந்தினார், அஜித். அதில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்க நினைத்த அவர் அதிரடியாக, அப்படி நாட்டியமாடிய பெண்களில் ஒருவரை தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார். அது சமூகத்தில் பெரும் எதிரொலியை உருவாக்கியது. சிலர் பாராட்டி மகிழ்ந்தார்கள். பலர் கேலியும், கிண்டலும் செய்தார்கள்.

இந்த நிலையில் அவரது அம்மாவும், அப்பாவும் பெரும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். ‘ நீ திருமணமே செய்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அந்த பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்ளாதே’ என்று தடுத்தார்கள். அஜித்தின், உறவினர்களும் நண்பர்களும், ‘நீ அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டால் எங்களை எல்லாம் இழக்க வேண்டியதிருக்கும்’ என்று மிரட்டினார்கள். ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தால், பலர் அவரது தொடர்பில் இருந்து விலகுவார்கள் என்ற நிலை உருவானது. அதனால் தனது முடிவில் இருந்து மிகுந்த வருத்தத்தோடு அஜித் பின்வாங்கினார்.

அந்த காலகட்டத்தில் மஞ்சு என்ற பெண் அந்த கிராமத்திற்கு வந்தார். அவரும் அஜித் போன்ற சமூக சிந்தனை கொண்டவராக இருந்தார். பாலியல் அடிமைகள் போல் இருந்த பெண்களையும், அவர்களது குழந்தைகளையும் காப்பாற்ற விரும்பினார். அந்த நல்ல செயலுக்காக இருவரும் இணைந்தார்கள். அவர்களது மனமும் இணைந்தது. சேவையிலும், வாழ்க்கையிலும் ஒன்றாக இணைய திட்டமிட்டார்கள். அவர்கள் திருமணம் நடந்தது. அஜித்தின் பெற்றோர் அந்த விழாவில் அரைகுறை மனதோடு கலந்து கொண்டார்கள்.

இருவரும் சேர்ந்து அதற்கான அமைப்பை உருவாக்கினார்கள். அதன் பெயர் ‘பொம்மை’. அந்த அமைப்பிற்கு அவருடைய நண்பர் அனில் குப்தா நிறைய உதவிகளை செய்தார். நடிகை ஷபானா ஆஸ்மியும் உதவினார்.

இப்படி பலர் கொடுத்த நிதியுதவியில் அந்த கிராமப் பெண்களுக்கு கம்ப்யூட்டர், தையற்கலை, கைத்தொழில், தோட்டக்கலை போன்றவை இலவசமாக கற்றுத் தரப்படுகிறது. அவர்களுடைய குழந்தை களுக்கு கல்வியும், மருத்துவமும் வழங்கப்படுகிறது. இசை, நாட்டியம், ஓவியம் போன்ற கலைகளும் கற்றுத் தரப்படுகிறது. அஜித் உதவியால் பல பெண்கள் பாலியல் தொழிலில் இருந்து விடுபட்டு சமூக அந்தஸ்தோடு சுய தொழில் செய்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இருந்து பாராட்டு குவிந்துகொண்டிருக்கிறது. முதலில் மகனின் சமூக சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் இப்போது, ‘எங்கள் மகன் கலெக்டர் ஆகவில்லை.. கடவுள் ஆகிவிட்டான்’ என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

Next Story