தாலியும்.. தாலியை சுமக்கும் பெண்களும்..


தாலியும்.. தாலியை சுமக்கும் பெண்களும்..
x
தினத்தந்தி 18 March 2018 10:08 AM GMT (Updated: 18 March 2018 10:08 AM GMT)

காலம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. மிக முக்கியமானது என்று கருதப்பட்ட சில விஷயங்கள், தேவையற்றது என்று ஒதுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

காலமாற்றம் என்று சிலர்  அதை ஏற்றுக் கொள்கிறார்கள். பலர் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவஸ்தைப்படு கிறார்கள்.

தாலி நமது கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்தது. திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்து முகூர்த்தம் நடைபெறுவது வரை எத்தனையோ விதமான சடங்கு, சம்பிரதாயங்கள், செலவுகள், மனித உழைப்புகள் இருக்கின்றன. அத்தனைக்கும் மையமாக இருப்பது தாலி. உற்றார், உறவினர்கள் முன்னிலையில் தாலி கட்டப்பட்டு, போற்றப்படுகிறது. ஆனால் பெருநகரங்களில் உள்ள சில இளம் பெண்கள் பெரும்பாலும் தாலி அணிந்து கொள்வதில்லை. அதனை ஒரு பேஷன் பொருள் போல கழற்றி வைத்துவிட்டு தேவைப்படும் நேரத்தில் மட்டும் அணிந்துகொள்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் நடந்துகொள்ள என்ன காரணம்? இதோ சில பெண் களின் கருத்துக்கள்:

கோமதி: (வீட்டு வேலை செய்பவர்)

‘‘நான் வீட்டு வேலை செய்து விட்டு வீடு திரும்ப இரவு ஆகிவிடுகிறது. தனியாக வர வேண்டியிருப்பதால் தாலி எனக்கு பாதுகாப்பானதாக தெரியவில்லை. அதனால் வீட்டார் அனுமதியுடன் தாலியை பத்திரமாக வீட்டில் கழற்றி வைத்துவிட்டுதான் வேலைக்கு கிளம்புவேன். தங்கத்திலான தாலி இல்லாவிட்டால் தைரியமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எனக்கும் நிம்மதி வீட்டில் உள்ளவர் களுக்கும் நிம்மதி”

ஸ்வேதா: ( தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்)

“திருமணமான புதிதில் நான் தாலி பற்றி பேசவே தயங்கினேன். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, தவறாக நினைத்துவிடுவார்களோ என்றெல்லாம் பயந்தேன். தாலியை கழற்றி வைப்பதால் கணவர் உயிருக்கு ஆபத்து ஒன்றும் வந்து விடாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அக்கம் பக்கத்தினர் தவறாக கருதிவிடுவார்கள் என்ற உறுத்தல்தான் இருந்துகொண்டிருந்தது. நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பல பெண்கள் தாலி அணிவதில்லை. காரணம், நேரம் கெட்ட நேரத்தில் அலுவலகம் வரவேண்டி இருக்கும். அடிக்கடி ஷிப்ட் மாற்றிப் போடுவார்கள். வெளியே செல்லும் எல்லா நேரங்களிலும் தாலியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க முடியாது. என் நிலைமையை உணர்ந்து குடும்பத்தினர் கொடுத்த அனுமதியின் பேரில் தாலியை கழற்றி வைத்துவிட்டு அலுவலகம் சென்று வருகிறேன் . முக்கியமான விேசஷங்களுக்கு மட்டும் அணிந்து கொள்வேன். இது மாதிரியான சமூக சிக்கல்களை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்”

பிரியா: (உயர் அதிகாரி)

“சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கும் குடும்பம் என்னுடையது. நான் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்திருக்கிறேன். ஒரு ரசாயன உரத் தொழிற்சாலையில் மேலதிகாரியாக பணியாற்றுகிறேன். நான் தாலியை கழற்றிவைத்துவிட்டுதான் வருவேன். ஒரு முறை என் அலுவலகத்திற்கு என் மாமனாரும் மாமியாரும் வந்திருந்தனர். கழுத்தில் தாலி இல்லாததை பார்த்துவிட்டு, எங்கே தாலி? என்று கேட்டார் என் மாமியார். எதையோ சொல்லி அவர்களை சமாளித்து வீட்டிற்கு அனுப்பிவைத்தேன்.

வீட்டிற்கு சென்றதும் கலவரம் ஏற்படும் என்ற பயத்தோடு சென்றேன். ஆனால் என் மாமியார் அருகில் வந்து, ‘நீ வேலை செய்யும் தொழிற்சாலையில் ரசாயனம் உள்ளது. அங்கே நீ தாலியை அணிந்தால் தங்கம் பாழாகிவிடும். ஆனால் கைப்பையில் தாலியை கழற்றிவைக்காதே. அதை யாராவது தூக்கிச் சென்றுவிடுவார்கள். அதனால் இனி தாலியை வீட்டிலேயே பத்திரமாக வைத்து விட்டு போ. சொந்தக்காரங்க வீட்டுக்கு வரும்போது கொஞ்சம் கவனமா இரு. ஓடிப்போய் கழுத்தில் தாலியை அணிந்துகொள்’ என்றார். எனக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன். இதுதான் இன்றைய உண்மை நிலை. நமது பாதுகாப்பு நமது கையில்தான் உள்ளது. யாரும் தாலியை அலட்சியப்படுத்தப் போவதில்லை. ஆனால் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டிய அதே நேரம் நம்மையும் நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

காவல் துறை அதிகாரிகளும் இது பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகிறார்கள். திருடர்கள் பெரும்பாலும் குறிவைப்பது தாலியைதான். மற்ற நகைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தாலி நிச்சயம் தங்கத்தில் தான் இருக்கும் என்பது அவர்கள் கணிப்பு. அதனால்தான் பெண்களின் கழுத்தில் கைவைக்கிறார்கள்.

தாலியைவிடவும், தாலியை சுமக்கும் பெண் உயிர் முக்கியமல்லவா!

Next Story