மனிதர்களை பார்த்து நடுங்கும் பரிதாப பிராணிகள்


மனிதர்களை பார்த்து நடுங்கும் பரிதாப பிராணிகள்
x
தினத்தந்தி 18 March 2018 3:54 PM IST (Updated: 18 March 2018 3:54 PM IST)
t-max-icont-min-icon

கட்டுக்கதைகளை நம்புவதும், எதையும் திகிலோடு பார்ப்பதும் மனிதர்களுக்கு பிடித்தமான விஷயம். அதில் காலங்காலமாக நம்பப்படுவதை தவறென்று தெரிந்தாலும், அதை பகுத்தறிவுகொண்டு பார்க்காமல் அப்படியே சிலர் நம்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட சில பிராணிகள் மனிதர்களை பார்த்து பயந்துபோய் அலறுகின்றன. அவைகள் மனிதர் களின் மூடநம்பிக்கைகளில் இருந்து விமோசனம் பெற பரிதாபமாக அலைகின்றன.

வவ்வால்: இதை பெரும்பாலான திகில் படங்களில் பார்த்து பழக்கப்பட்டுவிட்டதால் இதனை இப்போதும் திகிலாகவே பார்க்கிறோம். காடு சூழ்ந்த பகுதிகளில் இருக்கும் வீடுகளில் வவ்வால்களை அதிகம் பார்க்கலாம். வவ்வால் தலைக்கு மேல் பறந்தால் அபசகுனம் என்பார்கள். சில சமயம் அது மனிதர் களின் தலை அருகில் தொட்டுவிட்டு பறந்து செல்லும். உடனே வவ்வால் தீண்டிவிட்டது, என்ன அசம்பாவிதம் நடக்குமோ என்று பயப் படுவார்கள்.

வவ்வால் வாசனையால் கவரப்படும் பிராணி. தலையில் போடும் ஷாம்பு, சட்டையில் ‘ஸ்பிரே’ செய்யும் செண்ட் போன்ற வாசனைகள் அதனை கவர்ந்திழுக்கும். அது மட்டுமின்றி நமக்குத் தெரியாமல் நம்மைச் சுற்றி கொசுவோ, விஷப் பூச்சிகளோ இருக்கும் அவைகளை வவ்வால் பக்கத்தில் வந்து பிடித்துக்கொள்ளும். பூச்சிகளின் ஒலியைவைத்து அதனைத் தொடர்ந்து வந்து பிடிக்கும். மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிகளை பிடித்து அது நல்லதுதான் செய்யும். நல்லது செய்யும் அதற்கு மனிதர்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது. தோட்டத்தில் வவ்வால் இருந்தால் அங்கே எலி, பல்லி, விஷப்பூச்சிகள் தொந்தரவு இருக்காது. வவ்வால் எப்போதுமே இரையை பிடிக்க கீழ்நோக்கி பறக்கும். அப்போது மனிதர்கள் தலையில் உரசிச்செல்லும்.

குருவி: வீடுகளில் உள்ள மரத்தில் கூடு கட்டி இருக்கும் குருவிகள் பற்றி ஒரு கதை உண்டு. ‘அப்போது பிறந்த குஞ்சுகளை மனிதர்கள் தொடக்கூடாது. தொட்டு மனிதர்கள் வாசனை பட்டுவிட்டால், தாய்பறவை அதனை திரும்ப சேர்த்துக்கொள்ளாது’ என்று ஒரு ‘நம்பிக்கை’ நிலவுகிறது. குஞ்சுகளை மனிதர்கள் தொட்டுவிடக்கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட கதை இது. எல்லா பறவையும் எல்லா நிலையிலும் தன் குஞ்சுகளை காப்பாற்றும். மனிதன் தொட்டுவிட்டான் என்பதற்காக ஒதுக்கி விடாது. குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்படும்போது மனிதர்கள் அதை பாதுகாக்க வேண்டும். சிறகுகள் வளர்ச்சியடையாத நிலையில் கூட்டிலிருந்து கீழே விழுந்துவிடும். அந்தநேரம் இந்த கதைகளை நம்பிக்கொண்டு சும்மா இருந்துவிடக்கூடாது. பூனை வந்து அதனை கவ்விக்கொண்டு போய்விடும்.

முயல்களும் கேரட்டும்: முயல் களுக்கு கேரட் பிடிக்கும் என்பது பெரும்பாலானோர் நம்பிக்கை. ஆனால் அது நிஜமில்லை. கார்ட்டூன்களிலும், குழந்தை பொம்மை படங் களிலும் முயல்களை கேரட்டுடன் பார்த்து பழக்கப்பட்டு விட்டோம். அதனால் அப்படி நினைத்துக் கொள்கிறோம். ஆனால் வெறும் கேரட் மட்டும் சாப்பிடக் கொடுத்தால் முயல்கள் இறந்துவிடும். முயல்கள் வளர்க்கும் பண்ணையில் ஒரே நேரத்தில் பல முயல்கள் இறந்து கிடந்தன. ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவைகளுக்கு கேரட் தவிர வேறு எதுவுமே தருவதில்லை என்று தெரியவந்தது. மனிதனுக்கு இனிப்பு பிடிக்கும் என்பதால் அதையே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நிலைமை என்னவாகும்? ஆபத்தாகிவிடும் அல்லவா! முயல்கள் புல்லை விரும்பி தின்னும்.. இலைகள், தண்டுகள், பசும்புல் போன்றவைகளை முயல்களுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். கேரட்டை இலையுடன் சேர்த்துக் கொடுத்துப் பாருங்கள். இலையை சாப்பிட்டுவிட்டு கேரட்டை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும். கேரட்டை மிக குறைந்த அளவில் முயல் களுக்கு கொடுக்கலாம்.

எலியும் பாலாடைக்கட்டியும்: கார்ட்டூன்களில் எலியையும், பாலாடைக்கட்டியையும் காட்சியாக்க காரணம் இருக்கிறது. குழந்தைகள் ஆரோக்கியமான உணவுவகைகளை சாப்பிட வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு பாலாடைக்கட்டிகள் பெருமளவு தயாரிக்கப்பட்டன. தயாரித்து வைக்கப்பட்டிருந்த பாலாடைக் கட்டிகளின் ஓரத்தில் எலிகள் கால்களால் பிராண்டி வைத்திருப்பதைப் பார்த்து எலி களுக்கு ‘சீஸ்’ மிகவும் பிடிக்கும் என்று முடிவு செய்துவிட்டார்கள். உண்மையில் எலிகள் வாசனையால் கவரப்படும் பிராணி. சீஸ் வாசனையால் கவரப்பட்டு எங்கிருந்தாலும் அதை நோக்கி வரும். ஆனால் எலிகள் அதனை விரும்பித் தின்னாது.

பால் குடிக்கும் பாம்பு: பாம்பு பால் குடிக்கும் என்று யார் சொன்னது? ஆண்டாண்டு காலமாக பரவி வரும் தவறான நம்பிக்கை இது. பாம்பு பால் குடிக்காது. பாம்புகள் ஊர்வன இனத்தை சேர்ந்தவை. அவைகளுக்கு பால் சுரக்காது. தன் குட்டிகளுக்கு பால் கொடுத்து வளர்க்கும் உடல் கட்டமைப்பு பாம்புக்கு கிடையாது. இவை பாலூட்டிகள் அல்ல. பாம்பு தண்ணீர் மட்டுமே குடிக்கும்.

நாகபஞ்சமி அன்று பாம்பு பால் குடித்ததை தான் கண்களால் பார்த்ததாக சிலர் சொல்வார்கள். உண்மையில் அன்று வலுக்கட்டாயமாக பாம்புகளுக்கு பால் புகட்டப்படுகிறது. ஆனாலும் அது குடிக்காது. அன்று பாம்புகளை கூடையில் அடைத்து வீடுவீடாக கொண்டு வந்து காசு சம்பாதிப்பார்கள். பாம்பு வளர்ப்பவர் அந்த பாம்பை நாகபஞ்சமிக்கு சில தினங்களுக்கு முன்பிருந்து தண்ணீர் எதுவும் கொடுக்காமல் தாகத்தில் தவிக்க விடுவார். அது தாகத்தால் வறண்டு கூடையில் சுருண்டு படுத்திருக்கும். அப்போது யாராவது பால் கொடுத்தால் நாவறட்சியை போக்க ஒருவேளை பாலை நக்கிப் பார்க்கலாம்.. அதை பார்ப்பவர்கள் பாம்புக்கு பால் பிடிக்கும் என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். பால், பாம்பின் உடலுக்கு ஏற்றதல்ல. பாலை குடித்தால் அதன் கல்லீரல், சிறுநீரகம் பழுதடைந்து உயிரிழந்துவிடும். இதனால் நாகபஞ்சமி அன்று ஆண்டு தோறும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகள் உயிரிழக்க நேரிடுகிறது.

பாம்பும் முட்டையும்: பாம்பு முட்டைக்கூழை குடிக்கும் என்று அதன் புற்றில் ஏராளமான முட்டைகளை உடைத்து ஊற்றுவார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுற்றிலும் துர்நாற்றம் வீசும். புற்றின் உள்ளே எறும்புகள் சூழ்ந்து பாம்பை கடித்துக்குதறிவிடும். வலி தாங்காமல் பாம்பு வெளியே வரும். உடனே கூடி இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு வணங்கும் காட்சிகளை ஆண்டு தோறும் கோவில்களில் காணலாம். ‘நான் யாருக்காவது கெடுதல் செய்கிறேனா? என்னை ஏன் சித்திரவதை செய்றீங்க’ என்று பாம்பு கதறுவது யார் காதுகளிலும் விழாது. பாம்பு முட்டையை முழுசாகத்தான் விழுங்கும். பாம்பு விழுங்கும் பிராணி.

மண்புழு: மண் புழுவை இரண்டாக துண்டித்துவிட்டால் இரண்டும் தனித்தனியே உயிர் வாழும் என்பது பலருடைய கருத்து. அது தவறு. அப்படி எதுவும் நடக்காது. அதற்கான உயிர் என்பது ஒன்று தான். மண் புழுவை வெட்டியவுடன் இரண்டு பாகமும் தனித்தனியே துடிக்கும். அவற்றின் நரம்பு மண்டலம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியது. அதனால் வெட்டுப்பட்ட இரண்டு பாகத்திலும் வலி இருக்கும். இதனால் அது துடிக்கும்.

சிப்பிகள்: கடல் வாழ் பிராணிகளில் சிப்பிகள் மிகவும் முக்கியமானது. சிப்பியின் ஓடு அது தங்குவதற்காக அமைத்துக்கொண்ட வீடு என்று நம்பப்படுவது தவறு. சிப்பிக்கான எலும்புக்கூடுதான் அதன் ஓடு. நமக்கு உள்ளே இருப்பதுபோல, அவை களுக்கு வெளியே இருக்கும் அவ்வளவுதான். பிறக்கும்போது சிறிதாக இருக்கும் சிப்பி வளர வளர வெளிப்புற ஓடும் வளரும். நமது எலும்புகளை போல் அதுவும் கால்சியத்தால் உருவானது. கடும் புயல், வெப்பம், கடல் கொந்தளிப்பு களிலிருந்து சிப்பிகளை காக்க ஓடு உதவுகிறது. மற்ற பிராணிகளிட மிருந்து தன்னை மறைத்துக்கொள்ளவும் துணைபுரிகிறது. சிப்பி இறந்த பிறகு ஓடு தனியாக வந்து விடுகிறது. கடற்கரை ஓரங்களில் குவிந்துகிடக்கும் அதில் அலங்காரப் பொருட்கள் தயார் செய்து விற்பது குற்றமில்லை. ஆனால் ஓடுகளுக்காக சிப்பிகளை உயிரோடு பிடித்து கொல்வது சட்டப்படி குற்றம். அதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஒட்டகம்: ஒட்டகம் பாலைவனத்தில் வெகுநாட்கள் தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழும் என்பது உண்மைதான். அதற்காக வயிற்றில் தண்ணீரை சேமித்து வைத்திருக்கிறது என்பது பொய். ஒட்டகத்தின் கிட்னி மற்றும் குடற் பகுதியில் நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனுடைய சிவப்பு அணுக்கள் ஒருவித முட்டை வடிவைக் கொண்டுள்ளதால் வறட்சியை தாங்கும் சக்தி அதிகம். ஒட்டகத்தின் திமில் பகுதியில் தண்ணீர் தேங்கியிருக்கும் என்று தவறாக நினைத்து சிலர் அதை அறுத்துப் பார்த்தார்கள். பாவம் ஒட்டகம் செத்துப்போய்விட்டது.

Next Story