உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 18 March 2018 10:47 AM GMT (Updated: 18 March 2018 10:47 AM GMT)

அந்த பெண், அரசு துறை சார்ந்த நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவரின் மகள். படிப்பில் ஆர்வம் கொண்டவள்.

பள்ளிப்படிப்பை முடித்ததும், நகரத்தில் உள்ள பிரபலமான கல்லூரியில் அவளுக்கு என்ஜினீயரிங் படிக்க இடம் கிடைத்தது. அவளுக்கும், அதே வகுப்பில் படிக்கும் மாணவருக்கும் காதல் உருவானது. கல்லூரியில் பலர் காதல் ஜோடிகளாக வலம் வந்ததால், இவர்களும் அவ்வப்போது ஊர் சுற்றினார்கள். அவள் தினமும் கல்லூரிக்கு ஸ்கூட்டியில் சென்று வருவாள்.

இறுதி ஆண்டும் வந்தது. அவர்கள் காதலில் தீவிரமாக இருந்தார்கள். இருவருக்கும் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. வேலைகிடைத்ததும், காதலை அப்படியே தொடர்ந்து கல்யாணத்தில் முடித்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள்.

அவர்கள் நெருக்கமாக இருந்த ஒரு கட்டத்தில் அவள், ‘நமது ஆழமான காதலுக்கு ஆதாரமாக நாம் முக்கியமான பரிசு ஒன்றை பரிமாறிக் கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு ஒரு மோதிரம் அணிவிக்கப்போகிறேன். பதிலுக்கு நீங்களும் எனக்கு ஏதாவது ஒன்றை கொடுங்கள்’ என்று கூறினாள். அவன் ரொம்ப தயங்கி, பின்பு சம்மதித்தான்.

மறுநாள் இருவரும் மோதிரங்களோடு வந்தார்கள். இன்பமான ஒரு பொழுதில் மோதிரங்களை மாற்றிக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் கேம்பஸ் இன்டர்வியூவில் இருவருக்குமே நல்ல நிறுவனம் எதுவும் வேலைதர முன்வரவில்லை. கிடைத்த வேலையில் சேருவதா அல்லது நல்ல வேலை கிடைக்கும் வரை காத்திருப்பதா என்று அவர்கள் குழம்பினாலும், காதலில் தெளிவாக இருந்தார்கள். காதல் தொடர்ந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் அன்று காதலனை சந்தித்துவிட்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தவள், லேசான விபத்தில் சிக்கிக்கொண்டாள். அதில் அவள் கையில் அடிபட்டிருந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனே அருகில் உள்ள மருத்துவ மனையில் அவளை சேர்த்தார்கள். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது.

அவளது காதலனின் அக்காள் அந்த மருத்துவ மனையில் நர்ஸ் வேலை பார்க்கிறார். அக்காளின் மோதிரத்தை அவருக்கு தெரியாமலே அவன் எடுத்து வந்து தனது காதலியான இவளுக்கு அணிவித் திருக்கிறான். வீட்டில் அனைவரும் மோதிரத்தை தேடியிருக்கிறார்கள். இறுதியில் மோதிரம் திருடுபோய்விட்டதாக முடிவுசெய்துவிட்டார்கள்.

காணாமல் போன தனது மோதிரம் காயமடைந்த அவள் கை விரலில் இருப்பதை பார்த்ததும், நர்ஸ் அதிர்ந்தார். அவளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, அந்த மோதிரத்தை பற்றி கேட்டதும், அவளுக்கு திக்கென்றாகிவிட்டது. ‘தனது காதலன் அணிவித்தது என்று எப்படி சொல்வது?’ என்று அவள் தயங்க, அந்த தயக்கத்தை தவறாக புரிந்துகொண்ட நர்ஸ், ‘அவள் தனது மோதிரத்தை திருடியவள் அல்லது திருடியவளிடம் இருந்து விலைக்கு வாங்கியவள்’ என்று சந்தேகப்பட்டு, “உண்மையை சொல்.. இல்லாவிட்டால் போலீசிடம் புகார் செய்துவிடுவேன்” என்று மிரட்டினார். இது மருத்துவமனையில் பெரும் சலசலப்பை உருவாக்க, இறுதியில் அவள் காதலை பற்றிய முழு உண்மைகளையும் சொல்ல வேண்டியதாகிவிட்டது.

தனது காதலன் சொந்த வீட்டிலே திருடியிருப்பது அவளுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் மோதிரத்தை அவனது அக்காவிடம் கழற்றிக்கொடுத்ததோடு, அவனுடனான காதலுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.

இளைஞர்களே காதலிக்கு பரிசு கொடுக்க, சொந்த வீட்டிலே கைவரிசையை காட்டிடாதீங்க.. இப்படி உங்க காதலும் ஆட்டம் கண்டிடும்..!

- உஷாரு வரும்.


Next Story